இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக இந்திய மீனவர்கள் குற்றம்: மௌனம் காக்கும் இலங்கை கடற்படை

OruvanOruvan

தமிழக மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஐந்து மீனவர்கள் மீன் பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் அத்துமீறி நுழைந்து மிரட்டியும், தாக்குதல் நடத்தியும் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் இந்திய மீனவர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன போதிலும், இதுதொடர்பில் இலங்கை கடற்படை அல்லது உரிய தரப்பினர் பதில் எதனையும் அளிக்காதுள்ளனர்.