தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி: அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்

OruvanOruvan

Keheliya Rambukwella

முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் நேற்று 10 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சி.ஐ.டி.யில் ஆஜராக உத்தரவு

தரமற்ற இம்யுனோகுனோபுலின் தடுப்பூசி மருந்து குப்பிகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் தணைக்களத்தில் ஆஜராகுமாறு முன்னாள் சுகாதார அமைச்சருக்கு மாளிகாந்த நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

கெஹலிய கோ ஹோம்

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைதுசெய்யுமாறு சுகாதார மற்றும் சிவில் தொழிற்சங்கத்தினர் கடந்த ஆறு மாதங்கலாக பல்வேறு வழிமுறைகளில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

குறிப்பாக நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக சிவில் அமைப்பினர் 'கெஹலிய கோ ஹோம்' எனக் கூடாரம் அமைத்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிஸார் போராட்டங்காரர்களின் கூடாரங்களை அகற்றியதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சி.ஐ.டி.க்கு முன்பாக போராட்டம்

கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று ஆஜரானபோது, அவரை கைது செய்யுமாறு சிவில் அமைப்பினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மருந்து கொள்வனவு மோசடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

130 மில்லியன் ரூபா நிதி மோசடி

தரமற்ற இம்யுனோகுலோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்து மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணையின் போது சுமார் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.