தாய்லாந்து பிரதமர் கொழும்பு வருகை, ரணிலின் அமெரிக்க, இந்திய எதிர்ப்பு நிலையா?: சுதந்திர தினமன்று சீனச் சார்பை உறுதிப்படுத்தும் நகர்வு!

OruvanOruvan

தாய்லாந்து பிரதமர் தவிசின் தலைமையிலான அரச உயர்மட்டக் குழு, இரண்டுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று சனிக்கிழமை காலை இலங்கைத் தீவுக்கு வந்தடைந்தது.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேசிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுமே தாய்லாந்து பிரதமர் இலங்கை தீவுக்கு வருகை தந்துள்ளார்.

விமான சேவை தாராளமயம்

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Sri Lanka-Thailand Free Trade Agreement) தாய்லாந்து பிரதமர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (GJRTI) மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் (GIT) ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது.

OruvanOruvan

அத்துடன், இலங்கை - தாய்லாந்து விமான சேவைகளுக்கு இடையிலான தாராளமயப்படுத்தப்பட்ட புதிய இரு தரப்பு விமான சேவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் நோக்கமாகும்.

புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிய பொருளாதாரங்களுடன் ஆழமான ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் என இலங்கை அரசாங்கம் ஒப்பந்தங்கள் குறித்து தமது விளக்கத்தை அளித்துள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் 2023 நவம்பரில் ஆரம்பமானது. ஏற்கனவே பல ஆண்டுகள் இதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 320.37 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

தாய்லாந்து 213.49 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இலங்கைத் தீவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதுடன், இலங்கையில் இருந்து 106.88 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது

இதனால் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இருநாடுகளும் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி வருமானத்தில் வளர்ச்சியை காண்பிக்கும் என இருநாட்டு அரசாங்கங்களும் அறிவித்துள்ளன.

தென் கிழக்கு ஆசியாவின் முக்கிய சுற்றுலாத்தளமாக உள்ள தாய்லாந்து சீனாவின் நெருங்க நட்பு நாடாகும். பௌத்த மதம் இருநாடுகளின் இராஜதந்திர உறவில் பெறும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டிருந்தது.

தாய்லாந்தில் சீன பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுக்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டிருந்ததுடன், எதிர்காலத்தில் இரு நாட்டு மக்களும் விசா இன்றி பயணம் செய்ய முடியும்.

இந்த நிலையில், இலங்கைக்கும் விமானப் போக்குவரத்தில் தாராளமயத்தை ஏற்படுத்த தாய்லாந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவுடன் நெருங்கமான உறவை பேணும் தாய்லாந்து, இலங்கையுடனும் நெருக்கம் காட்டி வருவதால் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இருநாடுகளையும் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது.

OruvanOruvan

சீனா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் பிரதான பாலமாக பௌத்த மதம் உள்ளது. இந்த மூன்று நாடுகள் நாடுகளும் ஏற்படுத்திக்கொண்டுள்ள வலுவான இராஜதந்திர உறவுகள் மேற்கத்தேய நாடுகளுக்கு விடுக்கப்படும் மறைமுக செய்தியா? என அரசியல் ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

தெற்காசியாவுடன் நெருக்கம் காட்டுவது ஏன்?

இலங்கை அண்மைக்காலமாக தெற்காசியாவுடன் நெருக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நகர்வு பௌத்த நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது.

அதேபோன்று இலங்கைத் தீவில் நிலைமாறும் பௌத்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் போக்கை மீண்டும் மக்களின் எண்ண ஓட்டமாக மாற்றத் துடிக்கும் ராஜபக்ச தரப்புக்கு சார்பான ரணிலின் அரசியல் போக்காகவும் இவ்வாறான நகர்வுகள் அமைகின்றன.

பௌத்த சித்தாந்தங்களை அடிப்படைவாத அரசியலாக்கி பல தசாப்தங்களாக இலங்கைத் தீவில் நிலைக்கொண்டிருந்த தரப்பினரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள் என்ற அச்சமும் இவர்களுக்கு அச்சுத்தலாக மாறியுள்ளது.

இதனால் ரணில் போன்ற மேற்கத்தேய சிந்தனைவாதிகளும் கடும் பௌத்தர்களாக மாறிவரும் நிலைக்கு பௌத்த சிங்களின் மனநிலையே காரணம்.