பெலியத்த கொலை; வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர்: ஒப்பந்த கொலையாளியான முன்னாள் கடற்படை வீரர் துபாய் நாட்டுக்கு தப்பியோட்டம்

OruvanOruvan

Beliatta mass shooting

பெலியத்த பிரதேசத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் ஒப்பந்த கொலையாளியாக செயற்பட்ட முன்னாள் கடற்படை வீரரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் நில்லேவெல,முத்தரகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

கொலையுடன் தொடர்புடைய முன்னாள் கடற்படை வீரர், கடந்த 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அபுதாபிக்கு தப்பிச் சென்றுள்ளதுடன் தற்போது அவர் கொஸ்கொட சுஜீ உட்பட பாதாள உலக தலைவர்களுடன்து துபாய் நாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான முன்னாள் கடற்படை வீரருடன் மற்றுமொரு ஒப்பந்த கொலையாளியாக இராணுவ விசேட படைப்பிரிவில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் செயற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் சூத்திரதாரி எனக்கூறப்படும் முன்னாள் இராணுவ மேஜர், கொலை குற்றச்சாட்டு சம்பந்தமாக கடந்த 2002 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர்.

இதனிடையே தாக்குதல் நடத்த கொலையாளிகள் சென்ற ஜீப் வண்டியை வழங்கியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துபாய் நாட்டில் இருக்கும் கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவரின் உத்தரவுக்கு அமைய நடந்த இந்த கொலைகளுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் நில்லேவெல முத்தரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது பொலிஸ் விசேடஅதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீ.சீ.டி.வி கெமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது,சந்தேக நபரான முன்னாள் கடற்படை வீரர், கும்புறுப்பிட்டிய நகரில் ஜீப்பில் இருந்து இறங்கி செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்தை தொடர்பான திட்டத்தில் முன்னாள் கடற்படை வீரரின் 39 வயதான மனைவியும் சம்பந்தப்பட்டுள்ளார்.

இந்த பெண் கொஸ்கொட சுஜீயின் சகாவான ஹர்ச என்ற நபருடன் இணைந்து தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பெண்ணின் தந்தையும் பாதாள உலக குழுவினருக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவரும் வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.