அஸ்வெசும மக்களின் வறுமையைப் போக்க அரசியல் சாரா வேலைத்திட்டமாகும்: -சாகல ரத்நாயக்க
மக்களின் வறுமையைப் போக்கி சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும், அதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” வேலைத்திட்டம் அரசியல் சாராமல் இந்நாட்டு மக்களின் வறுமையைப் போக்குவதற்கான பெரும் பணியாக அமைந்துள்ளதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு ரமதா ஹோட்டலில் நேற்று (01) பாடசாலை மாணவர்களின் மதிய உணவு வேலைக்கான ஊட்டச்சத்து அரிசி (Fortified Rice) வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கில் விவசாய மற்றும் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சு, கல்வி அமைச்சு, உலக உணவு வேலைத்திட்டம் (World Food Programme),உணவு மேம்பாட்டுச் சபை, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் (Bill & Melinda Gates Foundation) உள்ளிட்ட தரப்புக்கள் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
பிள்ளைகளின் இரத்த சோகை, நினைவாற்றல் குறைபாடு மற்றும் வளர்ச்சி குறைப்பாடு உள்ளிட்ட நோய்களுக்கான தீர்வாக இத்திட்டம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ் 05 இலட்சம் பிள்ளைகளுக்கு அடுத்த 08 மாதங்களில் ஊட்டச்சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்படவுள்ளது.
இதன்போது இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலம் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த அரிசி இதன்போது கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
எதிர்கால சந்ததியை ஆரோக்கியமானதாக உருவாக்கும் அதேநேரம் போஷாக்கு என்பதை வயிற்றுப் பசியைப் போக்குவதாக மாத்திரம் கருதாமல் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கிய காரணியாகவும் பார்க்க வேண்டும் என்றும் சாகல ரத்நாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த அவர், குறிப்பாக பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் (Bill and Melinda Gates) ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்த இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், உலக உணவு வேலைத் திட்டத்தின் தலையீட்டின் பலனாக 2003 ஆம் ஆண்டு போஷாக்குத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,
“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கின் 4 மாவட்டங்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் பின்னர் 6 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது.
அமைச்சுகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுக்க கிடைத்துள்ளமை மகிழ்ச்சிகுரியது. கொவிட் – 19 தொற்று பரவலுடன் நாட்டின் பொருளாதாரம் முன்னொருபோதும் இல்லாவகையில் சரிவை கண்டது. அதனால் இலங்கையின் வறுமை நிலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்தது.
இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்குத் திரும்பியுள்ளதுடன் மக்களின் வறுமையை ஒழிப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
நமது நாட்டில் வறுமையை போக்கவும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வந்தன. சமுர்த்தி வேலைத் திட்டம் பிரதான இடத்தைப் பெற்றதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அது மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
அஸ்வெசும திட்டம் அரசியல் சாராமல், தரவு அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தரவு அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதிப் பட்டியலின்படி, மக்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வாய்யப்பளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும். இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம்.
மேலும், ஒரு நாடாக நாம் நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும். அந்த நோக்கத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் அதிக வளர்ச்சியை எட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது, விவசாயத்தை நவீனமயமாக்குவது மற்றும் இலங்கையை உற்பத்தி மையமாக கட்டியெழுப்புவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை இன்று பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து வருகிறது. வாழ்க்கைச் செலவில் கணிசமான அதிகரிப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் போதும், நாட்டிற்கான புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
நாட்டிற்கு வருமானம் ஈட்டுவதில் சுற்றுலாத் துறை முன்னணியில் உள்ளது, மேலும் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளின் வசதிகளின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நாள்தோறும் அதிக பணத்தை செலவிடும் உயர்தர சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட உரக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட விவசாயத் துறையை நவீனமயப்படுத்த விரிவான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் மூலோபாய கூட்டாண்மைகள் மற்றும் திருத்தங்கள் மூலம் உற்பத்திகளை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க வலு சக்திக்காக இலங்கைக்கு சொந்தமான சுமார் 18,000 மெகாவொட் சக்தியுடன், பொருளாதாரத்தில் தனித்துவமான இடத்தை இத்துறை பெறும். பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் அதிகளவான முதலீட்டாளர்களை இலங்கைக்குள் ஈர்ப்பதற்கும் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் அரசியல் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.” என்று தெரிவித்தார்.