உயிருக்கு போராடும் சாந்தன்: மகனின் வருகைக்காக 33 வருடங்கள் கண்ணீருடன் காத்திருக்கும் தாய்

OruvanOruvan

Santhan is fighting

''என்ட பிள்ளைய தடவி ஒரு தண்ணி குடுக்க முடியாம இருக்கு... முகாமில தேடுவார் இல்லாம, கவனிப்பு இல்லாம விட்டுட்டாங்க... என்ன அங்க வா, இங்க வா எண்டு ஒருத்தரும் குறை நினைக்காதீங்க... என்னால முடியாது. என்னால என்ன செய்ய முடியும்... எனக்கு என்ட பிள்ளை வேணும்... ''

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டும் சிறைபட்டுக்கிடக்கும் சாந்தனின் தாயாரின் குமுறல் இது.

இரண்டு மாதங்களுக்கு முன் கம்பீரமாக நடமாடிய தமது மகன் எழுந்துகூட நிற்க முடியாத நிலையில் இருப்பதனைக் கண்டு கதறுகிறார் அந்தத்தாய்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்திய அரசியலின் போக்கையே முற்றிலும் மாற்றியது.

பெயரளவில் மட்டும் விடுதலை

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்த நளினி, பேரறிவாளன் ஆகியோருடன் இலங்கைச் சேர்ந்த சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நீண்ட சட்டப்போராட்டத்தின் பின்னர், இந்த வழக்கில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த பேரறிவாளன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதன் முதலாக விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி ஏனைய ஆறு பேரும் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளுக்கான சுதந்திரம்கூட இல்லை

31 வருடங்களாக சிறையில் அனுபவித்த சுதந்திரத்தில் கால் பங்கைக்கூட இந்த சிறப்பு முகாம்கள் இவர்களுக்கு கொடுக்கவில்லை. கடுமையான கட்டுப்பாடுகளுடன் வெளியுலகம் அறியாது 10 x 15 என்ற அளவிலான அறையிலே இவர்களது காலம் கழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலே, சாந்தனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து திருச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

''சட்டத்தரணிகள் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணாவின் பூரணமான உடல்நிலை குறித்து எதுவும் கிடைக்கவில்லை. உண்மையா சொல்லணும் என்டா சமூகத்தை நம்ப வைக்கப்பட்டது போல அவர்களுக்கு சுதந்திரமான எந்த விடயங்களும் இல்லை. கைதிகளை விட மோசமான கட்டுப்பாடுகளுடனேயே வைக்கப்பட்டுள்ளனர்.

எமக்கும் அவருக்குமான எந்த நேரடித் தொடர்பும் இல்லை. அவர் தொடர்பாகக் கிடைக்கும் அத்தனை செய்திகளும் சட்டத்தரணி வழங்கும் தகவல்கள் மட்டுமே. தொலைபேசி பயன்படுத்தக் கூட அவர்களுக்கு அனுமதி இல்லை'' என சாந்தனின் சகோதரர் தெரிவிக்கின்றார்.

தமிழ் தலைமைகள் கோரிக்கை

சாந்தனின் குடும்பத்தாரின் பகிரங்க கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசியல் காலத்தை ஆட்டங்காண செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த சமூகத்தின் கவனமும் சாந்தன் மற்றும் அவரது குடும்பத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்த நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சாந்தனின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் விரைவில் பதிலளிப்பதாக சாந்தனின் குடும்பத்தினரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், சாந்தனுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் குடும்பத்தினருடன் இணைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் சாந்தனை நாட்டுக்கு அழைத்துவர கோரிக்கை விடுத்துள்ளார்.

முருகன், மற்றும் ராபர்ட் பயாஸ் உண்ணாவிரதம்

சாந்தன் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன், மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் தங்களை குடும்பத்துடன் சேர்க்குமாறு உண்ணாவிரம் இருந்து வருகின்றனர்.

தன்னை குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரி கடந்த 28ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதேபோன்று ராபர்ட் பயாஸ் சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து தம்மை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கோரி நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட நிலைப்பாடு

சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் நால்வருமே தமது உறவுகளுடன் தம்மை சேர்த்துவைக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தனித்தனியே வழக்குத் தாக்கல்களும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு குறித்த நால்வரின் பயண ஆவணங்களை சமர்ப்பிக்கும் நிலையில், அவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க முடியும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.

இருப்பினும் இலங்கை அரசாங்கத்தினால் எவ்வித பதில்களும் வழங்கபபடவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. அத்துடன், சாந்தனைப் பொறுத்தவரையில் தாம் ஒரு இலங்கையர் என்பதனை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தும் அவர் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படாமல் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஒரு நாட்டின் பிரஜை பிறிதொரு நாட்டுக்குள் உரிய ஆவணம் இன்றி பிரவேசிப்பாராயின் தற்காலிக ஆவணங்களின் அடிப்படையில் குறித்த நபரை உரிய நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் ஒரு நாட்டு பிரஜை பிறிதொரு நாட்டில் குற்றச்செயலில் ஈடுபடுவாராயின் அந்த நாட்டில் தண்டனை அனுபவிப்பதற்காக சாத்தியம் காணப்படுகிறது. அல்லது நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் கைதிகள் பரிமாற்றப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் மட்டுமல்ல ஏனையவர்களும் நாடு திரும்புவதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை என்கிறார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம்.

''விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைப்பதவிகளில் இருந்தவர்கள் கூட சுதந்திரமாக நடமாடும் நிலையில் அப்பாவிகள் இவ்வாறு தண்டிக்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. சட்ட ஆவணம் இல்லை, எந்த நட்டு பிரஜை என்பது உறுதிப்படுத்த முடியவில்லை என்பது எல்லாம் இவர்களை வெளியில் விடாமல் இருப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் மட்டுமே. இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் இழுபறி நிலையே அவர்களின் இந்த நிலைக்கு காரணம்'' என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், குறித்த நால்வரையும் இலங்கைக்கு அனுப்புவதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

''தண்டனைக்காலம் நிறைவடையும் நிலையில் அவர்களை தாய் நாட்டுக்கு அனுப்புவது குறித்து தமிழ்நாட்டு அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் அறிவிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்'' என அவர் குறிப்பிட்டார்.

ஆக, சாந்தன் மாத்திரமல்ல முருகன், ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் மூன்று தசாப்தங்களில் பின்னரேனும் தமது குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பது மட்டுமே எதிர்பார்ப்பாக இருக்கிறது.