அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது: மருந்து இறக்குமதியில் மோசடி, சிஐடி கிடுக்குப்பிடி விசாரணை

OruvanOruvan

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்குவதற்காக அவர் ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சுமார் 10 மணிநேரம் வாக்கு மூலம் பதிவு செய்தும் இருந்தனர்.

130 மில்லியன் ரூபா நிதி மோசடி

தரமற்ற இம்யுனோகுலோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்து மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணையின் போது சுமார் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைதான 7 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

முன்னதான நீதிமன்ற உத்தரவுக்களுக்கமைய இம்மருந்துகளை உற்பத்தி செய்து, விநியோகத்திருந்த தனியார் நிறுவன உரிமையாளர், மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காய்வாளர் நேரான் தனஞ்சய, களஞ்சியக் கட்டுப்பட்டாளர் சுஜித்குமார, சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத்குமார ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி விடயம் தொட்ரபில் கைதான 7 சந்தேக நபர்கள் மாளிகாந்த நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சி.ஐ.டி.யில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க கெஹலியவுக்கு உத்தரவு

கடந்த டிசம்பர் மாதம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில் மேற்கொண்ட மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சுயமாக முன்வந்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்கு மூலம் அளித்திருந்தார்.

எவ்வாறெனினும் இந்த விடயம் தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்கவிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு அமைவாக குறத்த இருவரையும் நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவை தட்டிக்கழித்த கெஹலிய

இருப்பினும் கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவில்ல‍ை.

எனினும் சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக வைத்தியர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 10 மணிநேரம் வாக்கு மூலங்கை பதிவு செய்திருந்தது.

‍கெஹலியவுக்கு பயணத் தடை

இந்த வழக்கு நேற்று மாளிகாந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.