திங்கட்கிழமை பொது விடுமுறை இல்லை: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Daily news in 40 words...

திங்கட்கிழமை பொது விடுமுறை இல்லை

ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் எதிர்வரும் திங்கட்கிழமை (5) பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் கவலை

இலங்கையின் புதிய நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகளுக்கு மிகவும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐ.நா ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் (UNHCR) தெரிவித்துள்ளது.

நாரம்மல சம்பவம்; பொலிஸ் உப பரிசோதகருக்கான விளக்கமறியல் நீடிப்பு

நாரம்மல பகுதியில் லொறி சாரதி ஒருவரை தற்செயலாக சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கான விளக்கமறியல் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடிப்பு - நாரம்மல நீதிவான் நீதிமன்றம்

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்களை மீளப்பெற அனுமதி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை மீளப்பெறுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் வர்த்தமானியில்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், வர்த்தமானி அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியை முழுமையாக பார்வையிட

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் தரம் 06 க்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளை பெப்ரவரி 05 முதல் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்:

https://g6application.moe.gov.lk/#/

தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் ஒரு நாளாக மட்டுப்படுத்தப்பட்டது

திடீர் சுகயீனம் காரணமாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினின் இலங்கைக்கான விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறுகிய விஜயத்தில் அவர் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சுமார் ஒரு மணித்தியாலம் கலந்து கொள்வார் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

பாணின் எடை குறித்து வர்த்தமானி வெளியீடு

பாணின் நிலையான எடையை குறிப்பிடும் அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி 450 கிராம் பாண் 13.5 கிராம் குறைப்பாட்டுடன் இருக்கலாம். 225 கிராம் பாண் 09 கிராம் குறைப்பாட்டுடன் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல சீ.ஐ.டி வருகை

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் முன்னிலையாகியுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கெஹலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

கட்டாரில் இருந்து போதைப் பொருள் வர்த்தகம் மேற்கொண்டவர் கைது

கட்டாரில் இருந்தபடி இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்ட முக்கிய சந்தேகநபரான ரொஷான் சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வௌிநாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதன் மூலம் எட்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விலகல்

க.பொ.த. (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்கள் விலகிக் கொண்டுள்ளனர்.உயர்தர விடைத்தாள்களை சரிபார்ப்பதற்காக வழங்கப்பட்ட நாளொன்றுக்கு 2000 ரூபா கொடுப்பனவு இம்முறை வழங்கப்படாததால் விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து விலகியதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெலியத்தை ஐவர் படுகொலைச் சம்பவத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கைது

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் உள்ளிட்ட ஐவர் படுகொலைச் சம்பவத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்,கடற்படையின் முன்னாள் சிப்பாய் ஒருவரின் மனைவியும்,அவரது தந்தையும் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பிரதான நபர் முன்னாள் கடற்படைச் சிப்பாய் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின எச்சரித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்பின் காரணமாக பேருந்துக் கட்டணங்களை கட்டாயமாக அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆகக்குறைந்த தொடக்க கட்டணம் 35 ரூபாயாக அறவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளைப் பார்வையிடுவோருக்கு விசேட சலுகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளைப் பார்வையிடுவோருக்கு விசேட சலுகை வழங்கப்படவுள்ளது. சுதந்திர தினத்தன்று திறந்த இடத்தில் தடுப்புகள் இன்றி கைதிகள் தமது உறவினர்கள், நண்பர்களை சந்திக்க அனுமதிக்கப்படவுள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலை வளாகத்திற்குள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு சிறைச்சாலை திணைக்களம் எசசரித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் தொடரும் பணி பகிஷ்கரிப்பு

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவையின் 72 தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.இந்நிலையில், இன்றும் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கெஹெலிய இன்று CID இல் முன்னிலை

மருந்து இறக்குமதி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வீட்டுக்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.