இலங்கையில் இன்றுமுதல் புதிய சட்டம் அமுல்: ஐந்துவருடம் சிறை தண்டனை

OruvanOruvan

இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் (online safety bill) இன்றுமுதல் அமுலாகிறது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆசிய இணையத்தள கூட்டமைப்பு உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தா?

நிகழ்நிலை காப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, ஒன்றுகூடல் மற்றும் தொழிற்சங்கங்களை அமைத்தல் ஆகிய சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் என சட்டத்தரணிகளும் சிவில் சமூக செயல்பாட்டாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை இந்தச் சட்டம் வலுப்படுத்தும் என்பதுடன், தனி நபர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சேறு பூசும் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் கூறுகிறது.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை உருவாக்குகின்றது. ஆணைகுழுவுக்கு நியமிக்கப்படும் ஐந்துபேர் கொண்ட குழு மூன்று வருட பதவிக்காலத்தை கொண்டதாக இருக்கும்.

OruvanOruvan

கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும்

ஆள்மாறாட்டம் மற்றும் தவறான விடயங்களை ஒருவர் பதிவிடும் பட்சத்தில் அதனை பொலிஸ் அல்லது குற்றப் புலானாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றமாக குறித்த நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவே விசாரிக்கும்.

நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது, ஒருசில தொடர்பாடல்களை தடை செய்வது, தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் சட்டத்தில் கட்டுப்படுத்தப்படும்.

இலங்கையில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகங்களை ஏற்படுத்துவதற்காக பொய்யான தகவல்கள் மூலம் அநாவசியமான முறையில் மக்களை தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கத்துடன் போலியான செய்திகளை பகிர்தல்,

ஆள் மாறாட்டம் மூலம் மோசடி, கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையை மறுத்தல் போன்ற விடயங்கள் இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்கள் என உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 5 வருட சிறை தண்டனையை விதிக்கவும் சட்டம் பரிந்துரைக்கிறது.

ஊடகச் சுதந்திரத்துக்கு கடும் அச்சுறுத்தல்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கான முதல் அடித்தளமாகவே நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

நிகழ்நிலை காப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் இந்த இரண்டு சட்டங்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள், ஊடக அமைப்புகள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தப்பினர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கல் மீதான விசாரணைகளின் போது சட்டத்தில் 34 திருத்தங்களை உயர்நீதிமன்றம் முன்மொழிந்திருந்த போதிலும் அரசாங்கம் குறிப்பிட்ட சில திருத்தங்களுடன் சட்டத்தை நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.