'லொரென்சோ புத்தா 04' மீட்கப்பட்ட கதை: கடற்கொள்ளையர்களை மண்டியிட வைத்த கூட்டு முயற்சி

OruvanOruvan

'Lorenzo Butha 04' rescue Joint Operation

சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களுடன் 'லொரென்சோ புத்தா 04' எனும் மீன்பிடி படகு நேற்றைய தினம் (31) மஹே (Mahe) தீவை சென்றடைந்துள்ளது.

மீனவர்களுடன் படகை கைப்பற்றிய மூன்று சோமாலிய கடற்கொள்ளையர்களை சீஷெல்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சீஷெல்ஸ் கடலோர காவல்படையின் மீட்பு போராட்டத்தினை அந்த நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

'லொரென்சோ புத்தா 04' மீட்பு கூட்டு நடவடிக்கை

சிலாபம் - திக்கோவிட்ட மீன்பிடி துரைமுகத்தில் இருந்து கடந்த 12 ஆம் திகதி தமது பயணத்தை ஆரம்பித்த 'லொரென்சோ புத்தா 04' மீன்பிடி இழுவைப் படகு ஆறு மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கடந்த 27 ஆம் திகதி உறுதிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து குறித்த படகை மீட்பதற்கான கூட்டு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை கடற்படை, இந்திய கடற்படை மற்றும் சீஷெல்ஸ் கடற்படைக்கு ஆகியவை இணைந்து நடத்திய தீவிர நடவடிக்கையின் பிரதிபலன் கடற்கொள்ளையர்கள் ஆதிக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

'லொரென்சோ புத்தா 04' கடந்த 27 ஆம் திகதி சோமாலியாவின் மொகடிஷு (Mogadishu) கடற்கரையில் இருந்து 500 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய கடற்படை தமது ரோந்து கப்பலான ஐ.என்.எஸ் ஷரதாவை (INS Sharada) அனுப்பிவைத்தது. அத்துடன், படகை கண்டுபிடிப்பதற்கு ட்ரோன்களையும் அனுப்பியது இந்தியா.

தொடர்ந்து இலங்கை மற்றும் சீஷெல்ஸ் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தின் பின்னர் கடந்த 29 ஆம் திகதி சீஷெல்ஸ் கடலோர காவல்படையினால் படகு கைப்பற்றப்பட்டது.

OruvanOruvan

Somali pirates

திக் திக் நிமிடங்கள்

இந்த பின்னணியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த சீஷெல்ஸ் கடலோர காவல்படையின் செயல்பாட்டு பணிப்பாளர் மேஜர் ஹான்ஸ் ராடேகொண்டே (Hans Radegonde) ;

''கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதியில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சோமாலிய மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இந்தப் பகுதியில் கொள்ளைகளின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட தற்போது திருட்டு அடிக்கடி நடப்பதைக் காண்கிறோம். இவர்கள் இயங்கும் பகுதி சீஷெல்ஸ் கடற்பகுதிக்கு அருகில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறோம் மற்றும் எங்கள் செயல்பாடுகளைத் தொடர்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை கடற்படையிடமிருந்து கடந்த 27 ஆம் திகதி கடத்தல் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும், 29 ஆம் திகதி 1.4 மில்லியன் சதுர கிலோமீட்டரைக் கொண்ட சீஷெல்ஸ் பிரத்தியேக பொருளாதார மையத்திற்குள் படகு நுழைந்ததன் பின்னர் பயணக்கைதிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் மேஜர் ஹான்ஸ் ராடேகொண்டே குறிப்பிட்டுள்ளார்.

''படகைக் கண்காணிக்கவும் அதன் போக்கைக் கண்காணிக்கவும் எங்களுக்கு ஒன்றரை நாள் ஆனது. நாங்கள் படகிற்கு அருகில் வந்தோம். முதற்கட்ட கண்காணிப்புக்குப் பிறகு, படகில் இருந்தவர்கள் ஆயுதம் ஏந்தியிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. நாங்கள் நெருங்கி வந்தபோது, அவர்கள் சோமாலிய கடற்கொள்ளையர்கள் என்பதை உறுதிப்படுத்தினோம்.

நாங்கள் அவர்களை நெருங்கியதும் அவர்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டினார்கள். எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், இந்த நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்தோம். இது மிகவும் நுட்பமான நடவடிக்கை. அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை'' என மேஜர் ஹான்ஸ் ராடேகொண்டே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

தற்போது இலங்கையின் 'லொரென்சோ புத்தா 04' படகு சீஷெல்ஸ் தளத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மூன்று சோமாலிய கொள்ளையர்களும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வெற்றிகரமான மீட்பு நடவடிக்கைக்கு சீஷெல்ஸ் கடலோர காவல்படைக்கு நன்றி தெரிவித்த இலங்கை உயர்ஸ்தானிகர் ஸ்ரீமல் விக்ரமசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சீஷெல்ஸ் அரசாங்கத்துடன் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.