இலங்கை மக்களுக்கு அடி மேல் அடி: போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு

OruvanOruvan

inflation

எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு சாத்தியம், பாடசாலை போக்குவரத்து கட்டண உயர்வு, ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு போன்ற பல காரணிகள் மாதத்தின் முதல் நாளான இன்று இலங்கையர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மாத்திரமன்றி சர்வதேச சமூகம் உள்ளிட்ட பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டமும் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தம்

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக எரிபொருள் விலையானது இன்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்துக்கு அமைவாக, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 371 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 08 ரூபாவினால் குறைக்கப்பட்டு 456 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒட்டோ டீசல் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 363 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 07 ரூபாவினால் குறைக்கப்பட்டு 468 ரூபாவாகவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 262 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்துக்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தனது விலையை மாற்றியமைத்துள்ளது.

அதேநேரம், சீனாவின் சினோபெக் எண்ணெய் நிறுவனமும் தனது விலையை நள்ளிரவு முதல் திருத்தி அமைத்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு , 368 ரூபாவாக உயர்ந்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 456 ரூபாவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 360 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேநேரம் சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 468 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை

உலகப் பொருளாதார வளர்ச்சியின் உயர் முன்னறிவிப்பு மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள், சீனாவின் எரிபொருள் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து செல்கின்றன.

சற்று முன்னர் நிலவரப்படி, அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 75.96 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 80.69 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

OruvanOruvan

பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டணங்களை 10 வீதம் மற்றும் 15 வீதத்தால் அதிகரிக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (01) முதல் ரயில் பொதிகள் சேவை கட்டணமும் 80 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்டச கட்டணம் 150 ரூபாவாக உயரும் என்று ரயில்வே பொது மேலாளர் கூறியுள்ளார்.

பஸ் - முச்சக்கர வண்டி கட்டணங்கள்

கடந்த மாதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் வட் வரி அதிகரிப்பு போன்ற காரணங்கள் இருந்தாலும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது பஸ் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.

எனினும் முச்சக்கர வண்டி கட்டணமானது கடந்த ஜனவரி மாதம் அதிகரிக்கப்பட்டது.

முதல் ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனினும் இரண்டாவது கிலோ மீட்டருக்கான கட்டணம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந் நிலையில் இன்றைய எரிபொருள் கட்டண உயர்வும் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் எரிபொருள் விலை உயர்வு மாத்திரம் அன்றி கடந்த மாத வட் வரி அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் உதிரிப்பாகங்களின் விலையும் சடுத்தியாக அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானத்தை அவர்கள் எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய சேவைகள்

பஸ், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் மாத்திரமல்லாது ஏற்கனவே அதிகரித்துள்ள மரக்கறி விலைகள் போன்ற ஏனைய பொருட்கள் மீதும் எரிபொருள் கட்டண அதிகரிப்பானது மறைமுகமாக தாக்கத்தை செலுத்தலாம்.

பண வீக்கம்

வட் வரி அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றின் காரணங்களால் பணவீக்கமானது கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இருந்து தொடர்ந்தும் அதிகரித்து செல்கின்றது.

குறிப்பாக 2023 டிசம்பர் மாதத்துக்கான நாட்டின் பிரதான பண வீக்கம் 4.2% ஆக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் 1.6% ஆக அதிகரித்துள்ளது. எனினும் உணவு அல்லாத பணவீக்கம் 6.3% ஆக குறைந்தது.

இந் நிலையில் கடந்த ஜனவரி மாதமும் நாட்டின் பணவீக்கமானது மேலும் அதிகரித்துச் சென்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

கடவுச் சீட்டு கட்டண அதிகரிப்பு

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகத்துக்கான கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 ஆயிரம் ரூபாவாக இருந்த குறித்த கட்டணம் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த ஜனவரி மாதம் சடுதியாக அதிகரித்து சென்றுள்ளதை காண முடிகின்றது.

குறிப்பாக ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி அதிகரித்து சென்றிருந்தது.

ஜனவரி மாதத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் (31) அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.81 ரூபாவாக காணப்பட்டது விற்பனை பெறுமதி 321.85 ரூபாவாக பதிவாகியிருந்தது.

டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், எரிபொருள் உயர்வு, வட் வரி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களினால் இலங்கை மக்கள் தொடர்ச்சியாக பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றனர்.

பெப்ரவரி 01 ஆம் திகதியான இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு சாத்தியம், பாடசாலை போக்குவரத்து கட்டண உயர்வு, ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு போன்ற பல காரணிகள் மாதத்தின் முதல் நாளான இன்று இலங்கையர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒப்புதல் அளித்துள்ளதுடன், அது இன்று (01) முதல் அமுலுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.