சிங்கப்பூருடன் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் இலங்கை: கொழும்பில் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை

OruvanOruvan

சிங்கப்பூருடன் விரிவான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுப்படுத்துவது குறித்தும் தெரிவித்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போதும் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இதன் அடுத்தகட்டமாக கொழும்பில் அமைச்சர் நளின் பெர்ணான்டோ, இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் எஸ்.சந்திர தாஸுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது இருநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை விரிவாக்குவது குறித்து ஆலோசித்துள்ளனர்.

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதன் ஊடாக இலங்கை சாதகமான முன்னேற்றத்தை அடைய முடியும் எனத் தெரிவித்த சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர், அதற்கான முறையான கட்டமைப்பை உருவாக்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதன்படி, சிங்கப்பூரின் மொத்த சந்தைப் பங்கில் 60 வீதத்தை கொண்டுள்ள NTCU (பல்பொருள் அக்காடி சங்கிலி) க்கு விஜயம் செய்து இலங்கை பல்பொருள் அங்காடி சங்கிலியை மறுவடிவமைக்கும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கு சிங்கப்பூரின் முதலீடுகளை ஈர்க்கும் சாத்தியம் குறித்து வர்த்தக அமைச்சர் பெர்னாண்டோ கேட்டறிந்ததுடன், இலங்கையில் அறுவடைக்குப் பின்னரான சேதங்கள் மிக அதிகமாக காணப்படுவதால் அதன் செலவை நுகர்வோரே ஏற்க வேண்டியுள்ளது. இதில் இருந்து பாதுகாக்கும் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெறுவது அவசியம். அதற்கான ஒத்துழைப்புகளையும் அமைச்சர் கோரினார்.

இலங்கைக்கு பல்வேறு விடயங்களில் சிங்கப்பூர் ஒத்துழைப்பு வழங்கும் என உயர்ஸ்தானிகர் எஸ்.சந்திர தாஸ் இதன்போது உறுதியளித்துள்ளார்.