டெலிகொம் பங்குகளை கொள்வனவு செய்ய சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி: ஆலோசனை அமைப்பாக செயற்படும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம்

OruvanOruvan

India's Jio and China's Gortune pre-qualify for SLT stake bid

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் (jio platforms) மற்றும் சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் (Gortune Investment Hosling co. LTD) ஆகிய நிறுவனங்களே இவ்வாறு தகுதி பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23 வீத பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் லைகா குழுமத்தின் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு முன்வந்தன.

இதன்படி, நிதி அமைச்சின் சிறப்பு திட்டக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு கலந்துரையாடல் குழு ஆகியன டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கான முன் தகுதி பெற்ற போட்டி நிறுவனங்களாக ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றை தெரிவுசெய்துள்ளன.

இதனிடையே, உலக வங்கியுடன் இணைந்த சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், இலங்கை டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கான விசேட ஆலோசனை அமைப்பாக செயற்படுகின்றது.