இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனிதவுரிமை மீறல் வழக்கு: பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தாக்கல் செய்கின்றனர்

OruvanOruvan

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்றை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்தது.

''மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் - 2024'' எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பேரணியை நடத்துவதற்கு எதிராக மூன்று நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பொலிஸாரின் தடுப்புகளை தாண்டி பேரணி பயணிக்க முற்பட்ட போது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

இதனால் பேரணியில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிகார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கை தொடர எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த தாக்குதலுக்கு எதிராக தனி மனித உரிமை வழக்குகளை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்..