இந்தியா - இலங்கை இணைப்பு: கொழும்பு வரை எல்என்ஜி குழாய், மின் கட்டணத்தை குறைக்க திட்டம்

OruvanOruvan

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க கொச்சியிலிருந்து கொழும்பு வரை திரவ இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியா ஹவுஸில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் இந்த விடயத்தை கூறினார்.

இந்தியாவிற்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு இலங்கையைத் தயார்படுத்த மின் கட்டண இணைப்பு செயற்திட்டம் மேற்கொள்ளப்படும் அதேநேரம், இலங்கையில் மின்சார செலவைக் குறைக்க கொச்சியிலிருந்து கொழும்பு வரை எல்என்ஜி குழாய்களை அமைப்பதற்கும் இந்தியா பணியாற்றி வருவதாக சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இந்தியா-இலங்கை இணைப்பு வழித்தடத்தை அமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் இந்தியா பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா இருப்பதாகவும் அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும் இந்தியா இருந்து வருவதாகவும் சந்தோஷ் ஜா கூறினார்.

இந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.