அமைச்சர் டிரான் அலசுக்கு எதிராக வழக்கு: சஜிதை இலக்கு வைத்து கண்ணீர்ப்புகை தாக்குதல்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் நீதிமன்ற உத்தரவை மீறி டிரான் அலஸின் உத்தரவின் பேரில் பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொண்டதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறிய அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் இதன் போது ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்தே பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் ஜனநாயக உரிமையைக் கூட இந்த அரசாங்கம் மதிக்கத் தயாராக இல்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.