பல திருத்தங்களுடன் தொடரும் ‘அஸ்வெசும’ திட்டம்: பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

OruvanOruvan

People receive “Aswesuma” benefits

பல்வேறு புதிய திருத்தங்களுடன் ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தினை தொடர்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்ட பயனாளிகளில் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் செல்லுபடியாகும் காலத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானதத்தை இழந்த பயனாளிகளின் செல்லுபடியாகும் காலத்தினை இம்மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மற்றும் தற்காலிகமாக வருமானத்தை இழந்த தரப்பினர்களை ஒன்றிணைத்து 8 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் வகையில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல்களை உறுதிப்படுத்தும் செயன்முறையின் பின்னர் அஸ்வெசும பயனாளர் பட்டியலில் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு தலா 7500 ரூபாவும், முதியோர்களுக்கு 3000 ரூபாவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரும் நடவடிக்கை இந்த ஆண்டின் முதல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஜூன் மதம் நிறைவு செய்வதுடன், ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக தகமை கொண்ட குடும்பங்களை உள்வாங்குவதற்கும், பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 2.4 மில்லியன் வரை மதிப்பாய்வு செய்வதற்கும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.