நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல சந்தர்ப்பம்: மகிந்த மற்றும் மைத்திரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் அந்த பதவிக்காலத்தில் மேற்கொள்ளும் அநீதியானது செயல்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது என்ற விதிவிலக்கு முற்றாக இரத்துச் செய்யப்பட்டு,அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையுடன் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிரராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
மனு சம்பந்தமாக முதல் கட்டடமாக விடயங்களை ஆராய்ந்த பின்னர், எஸ்.துரைராஜா, குமுதினி விக்ரமசிங், அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
சமூக செயற்பாட்டளாரான ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ம் திகதி அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு, பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதாக மனுதார் கூறியுள்ளார். இதன் பின்னர் அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்சவை நியமித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருந்த நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என மனுதாரர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு தனது விருப்பத்திற்கு அமைய பிரதமரை நீக்க சட்டத்தில் இடமில்லை எனவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.