ஒப்பந்த கொலையாளிகளாக படையினர் செயற்படுவதாக வெளியான செய்தி: அந்த செய்திக்கு விளக்கமளிக்காத அரசாங்கம்

OruvanOruvan

Links to soldiers in underworld murders

பாதுகாப்பு படைகளில் சேவையாற்றி வரும் நபர்கள், பாதாள உலகக்குழுக்களின் கூலி கொலையாளிகளாக செயற்படுவதாக கடந்த 28 ஆம் திகதி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்ததுடன் அந்த செய்தி தொடர்பாக முப்படை தளபதியான ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ இதுவரை எவ்வித விளக்கங்களையும் அளிக்கவில்லை.

“உத்தரவு பாதாள உலகக்குழுவிடம் இருந்து துப்பாக்கி வேட்டு படை முகாமில் இருந்து-அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி குறித்து உளவு தகவல்” என்ற தலைப்பில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

பாதுகாப்பு படையை சேர்ந்த சிலர் தமது கடமை நேரத்தில் கூட முகாமில் இருந்து வெளியில் சென்று தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியை பயன்படுத்தி ஒப்பந்த கொலைகளை செய்வதாக தற்போது தெரியவந்துள்ளது” எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

திவயினவில் வெளியான முழுமையான செய்தி

பாதாள உலக ஆயுதக்குழுக்கள் மேற்கொள்ளும் கொலைகளுக்கு பாதுகாப்பு படைகளில் சேவையாற்றும் உறுப்பினர்களை கூலி கொலையாளிகளாக பயன்படுத்தும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு படைகளை சேர்ந்த சிலர் தமது கடமை நேரத்தில் கூட முகாமில் இருந்து வெளியில் சென்று தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியிலேயே ஒப்பந்த கொலைகளை செய்வதாக தெரியவந்துள்ளது.

கடமையில் இருக்கும் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் இவ்விதமாக ஒப்பந்த கொலைகளை செய்வது மிகவும் பாரதூரமான நிலைமை என சுட்டிக்காட்டும் விசாரணை அதிகாரிகள், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காது போனால், எதிர்காலத்தில் மிக மோசமான நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கூலிக்கு கொலை செய்யும் இந்த பாதுகாப்பு படை உறுப்பினர்களில் சில போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் அல்லது நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் நபர்களாக இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கூலிக்கு கொலை செய்வதற்காக சென்ற பாதுகாப்பு படை உறுப்பினர்கள் சில சந்தர்ப்பங்களில் பொலிஸாரிடம் சிக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன.

சில தினங்களுக்கு மன்னர் அம்பலாங்கொடை நகரில் மீன் வியாபாரி ஒருவரை கொலை செய்ய சென்றிருந்த பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு பேரை பொலிஸார் ஆயுதங்களுடன் கைது செய்தமை அண்மையில் நடந்த சம்பவமாகும்.

கடமை நேரத்தில் இவ்வாறு பாதாள உலகக்குழுக்களின் ஒப்பந்த கொலைகளை செய்து விட்டு தப்பிச் செல்லும் பாதுகாப்பு படை உறுப்பினர்களை கைது செய்யும் போது மிகப் பெரிய சிக்கல் ஏற்படுவதாக விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் நடைபெற்ற போது, சந்தேக நபரான பாதுகாப்பு படை உறுப்பினர் முகாமில் கடமையில் இருந்தார் என்பதற்கான குறிப்புகள் பதிவேடுகளில் இருப்பதே இதற்கு காரணம்.

பாதுகாப்பு படையின் உறுப்பினர்கள் இரகசியமாக முகாமில் இருந்து வெளியேறி, தனது இலக்கை அடைந்த பின்னர் தந்திரமன முறையில் முகாமுக்குள் சென்று கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு, தமது கொலை இலக்கை நிறைவேற்றிக்கொள்ள பாதாள உலக தலைவர்கள், சேவையில் இருக்கும் பாதுகாப்பு படை உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென் மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் அண்மையில் நடந்த பாதாள உலகத்துடன் சம்பந்தப்பட்ட கொலைகளுடன் தொடர்புடைய நபர்களை பொலிஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை. இந்த கொலையாளிகள் பாதுகாப்பு படைகளில் சேவையாற்றும் நபர்களாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் கொலை, ரத்கமவில் பொலிஸ் பரிசோதகர் சுட்டுக்கொல்லப்பட்டமை, பாதுக்க பிரதேசத்தில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டமை உட்பட பல கொலைகளுடன் தொடர்புடைய கொலைகளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன என திவயின பத்திரிகையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பயங்கரமான செய்தி வெளியான பின்னர் பாரிய அராஜகத்தை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் மௌனம் சாதிப்பதன் மூலம் ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த அராஜக நிலைமையை வேண்டும் என்றே அனுமதித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.