கொழும்பில் சுதந்திர தினத்துக்கு பிரமாண்ட ஏற்பாடு: நடுவானில் விபத்தில் சிக்கிய நான்கு சாகச வீரர்கள்

OruvanOruvan

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட நாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்த காலிமுகத்திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக காலிமுகத்திடல் வீதியின் ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு கடந்த 30ஆம் திகதி முதல் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

சுதந்திரன தின நிகழ்வுகளில் இராணுவம், கடற்படை, விமானப் படையென முப்படைகளின் அணிவகுப்புகளும் இடம்பெறுவது வழக்கம் என்பதுடன், இலங்கையிடம் உள்ள சில ஆயுதங்கள் மற்றும் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும்.

அதற்கு அப்பால் விமானப்படையின் சாகசங்களும், இராணுவ மற்றும் விமானப் படை வீரர்களின் வான் சாகசங்களும் இடம்பெறும்.

இந்நிலையில், இம்முறை இடம்பெற்றுவரும் சுதந்திரன ஒத்திகையில் பங்குபற்றிய நான்கு பராட்ரூப் வீரர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் நடுவானில் பறக்கும் போது இரண்டு பாராசூட்கள் மோதி ஏற்பட்ட விபத்து காரணமாக அவசரமாக தரையிறங்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.

இதனால் நான்கு வீரர்களுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் விமானப்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் இருவர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இருவரும் இராணுவத்தை சேர்தவர்கள் என்றும் கேப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.

76ஆவது சுதந்திரதின நிகழ்வை முன்னிட்டு தாய்லாந்துடன், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை தீர்மானித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.