ஹரக் கடா தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நீடிப்பு: வேறு இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமாயின் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள “ஹரக் கடா” என்ற நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்பவரை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக இருந்தால் நீதிமன்றத்திற்கு அறிவித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என வெளியிடப்பட்டிருந்த இடைக்கால உத்தவை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
ஹரக் கடா என்பவரின் தந்தையான நெல்சன் விக்ரமரத்ன தாக்கல் செய்துள்ள மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் டி.என். சமரகோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த மனுவுக்கு எதிரான வாதங்கள் இருக்குமாயின் அதனை எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், ஹரக் கடா தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டுமாயின் அது குறித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அறிவித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனின் தடுப்பு காவல் உத்தரவை மேலும் நீடிக்கப்படுவதை நிறுத்தி உத்தரவிடுமாறு ஹரக் கடாவின் தந்தை தனது மனுவில் கோரியுள்ளார்.