இலங்கையில் கால் பதிக்கும் பில் கேட்ஸ் அறக்கட்டளை: ஜனாதிபதி செயலகத்தில் அமுல்படுத்தப்படும் விசேட திட்டம்

OruvanOruvan

உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill and Melinda Gates Foundation) இலங்கையில் சில திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதி, உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை செயல்பாட்டுத் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை உதவித் திட்டங்கள் உட்பட பன்நாட்டு தனியார் மற்றும் அரச நிறுவனங்களைின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது தேவையான உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த ஒத்துழைப்புகளை பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்க உள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் உதவித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விசேட பிரிவொன்றை பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆரம்பிக்க உள்ளதுடன், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பான குளோபல் ஹெல்த் ஸ்ட்ராடஜீஸ் (Global Health Strategies) மற்றும் அதன் உள்ளூர் பங்குதாரர் கனெக்ட் டு கேர் அமைப்பு ( Connect to Care Organization), இந்த உதவியளிக்கும் பிரிவை ஆரம்பிப்பதற்கான பங்களிப்பை வழங்க ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.

திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதற்கும் சரியான ஒருங்கிணைப்பை உறுதிசெய்யவும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக் குழுவை நியமிக்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.