நெருக்கடியில் இலங்கை அரசாங்கம்: வெடிக்கும் தொடர் போராட்டங்கள் - ஐ.ம.சவின் போராட்டத்துக்கு தடை

OruvanOruvan

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாரிய பேரணியொன்றை முன்னெடுக்க உள்ளது. இந்தப் பேரணியில் 50ஆயிரம் மக்கள் கலந்துகொள்வார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அளவுக்கு அதிகமான வரி சுமை, ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றமை உட்பட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

என்றாலும், கொழும்பில் இன்று நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகில் இருந்து பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர்ச்சியாக நாடுமுழுவதும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது.