ஒரு மணிநேரத்தில் 4 ஆயிரம் ரூபா: பலிக்கடாவாக்கப்படும் தேவையுடையோர்
இரு நாடுகள், ஒரேமாதிரியான பிரச்சினை. ஆனால் கையாளும் விதத்தில் மாறுபாடு காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி பல நாடுகளை மீள எழவிடாது நசுக்கிக்கொண்டிருக்கிறது.
கூலித்தொழிலாளர் முதல் கோடீஸ்வரர் வரை அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி அவரவர் தரத்திற்கேற்ப பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமையானது இலங்கை மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் யாசகம் பெறுவோர் தொகையில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, யாசகம் பெறுவோர் அற்ற இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக கலாசாரம், வரலாறு அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 30 நகரங்களை இந்திய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை தெரிவு செய்துள்ளது.
வடக்கில் அயோத்தி, தெற்கில் திருவனந்தபுரம், கிழக்கில் குவாஹாட்டி, மேற்கில் திரிம்பகேஷ்வர் என இந்தியாவின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த நகரங்களும் இதில் உள்ளடக்கப்படுகின்றன. குறிப்பாக, மதுரை, கோழிக்கோடு, விஜயவாடா, மைசூரு உள்ளிட்ட நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
‘விளிம்புநிலையில் உள்ள தனிநபர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளித்தல்’ என்ற திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்குள் யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய, யாசகம் பெறும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்படவுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்கப்படுவதுடன் வாழ்வாதாரத்துக்கு தேவையான கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகள் செய்யப்படவுள்ளன.
இந்திய யாசகர்களின் நிலைமை இவ்வாறிருக்க, இலங்கையில் பொருளாதார நெருக்கடியுடன் நகர்ப்புறங்களில் யாசகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக பொருளாதார மற்றும் சமூக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், யாசகர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான மதிப்பீடு இல்லாததன் காரணமாக, முறையான திட்டத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்தில் அவர்கள் ஒருங்கிணைப்பதில் நிச்சயமற்ற தன்மையே காணப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலடைந்ததில் இருந்து இன்றுவரை இலங்கை மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நிரந்தர தொழில் அற்ற நிலையில், தினக்கூலிகளாக தொழில் செய்து வந்தவர்கள், சிறு வியாபாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல், அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நாளாந்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாமையினால் யாசகர்களாக மாறிய நிலையை அவதானிக்க முடிகிறது.
இந்த பின்னணியில், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டு நகர்ப்புறங்களில் திடீர் யாசகர்களின் தொகை வெகுவாக அதிகரித்துள்ளதனை உணரமுடிகின்றது.
இந்த நிலையில், உதவி தேவைப்படும் உண்மையான யாசகர்களைப் போன்று நடித்து பணம் சம்பாதிக்கும் மோசடியாளர்களும் யாசகர்களாக இருப்பதனை பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துவருவோர் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் கதிர்காமம் பகுதியில் அண்மையில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் யாசகர்கள் போன்று குறித்த பகுதியில் யாசகம் பெற்ற நிலையில் ஒரு மாணவர் ஒருமணிநேரத்தில் 4 ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொண்டதாக சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் தெரிவிக்கின்றார்.
இதனிடையே, 2023 ஆம் ஆண்டில், சமூக சேவைகள் திணைக்களம் இலங்கையில் யாசகர்கள் பற்றிய ஆய்வு மற்றும் கணக்கெடுப்பை நடத்தியது. இருப்பினும் அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆகவே, நாட்டில் எவ்வளவு யாசகர்கள் இருக்கின்றனர் என்பதில் நிச்சயமற்ற நிலையே காணப்படுகின்றது. அத்துடன், யாசகர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு ஒரேயொரு மையம் மட்டுமே காணப்படுகின்றது. ரிதியகம பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தில் கிட்டத்தட்ட 600 யாசகர்கள் உள்ளனர். இவர்களை கையாள்வதில் சிரமம் காணப்படுகின்றது.
உண்மையான தேவைகளுடன் சமூகத்தில் யாசகம் பெறுவோரை சரியாக அடையாளம் காணத் தவறியமையே இந்த சமூகப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முதன்மை தடையாக உள்ளது.