தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல்: சுமந்திரனே காரணம் ; அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள்

OruvanOruvan

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தான்தோன்றித்தனமாக செயல்பட்டதாகவும் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரனிடம் நீதிமன்றம் செல்வேன் என மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த 26ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தெரிவுசெய்வதில் பல்வேறு நெருக்கடிகளும் வாக்குவாதங்களும் இடம்பெற்றன. இதனால் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதுடன், குகதாசனை பொதுச் செயலாளராக தெரிவுசெய்தமை செல்லுப்படியாகதென சிலர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சண்முகராஜா ஜீவன், பொதுச் சபையில் பொதுச் செயலாளரை தெரிவுசெய்ய முடியாது. செயலாளர் தெரிவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. நீதிமன்றம் செல்வேன் என கட்சியின் தலைவரையே சுமந்திரன் மிரட்டுகிறார்.‘‘என்றார்.

இதேவேளை, திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன்தான். தமிழரசுக் கட்சியின் மாநாடு மாத்திரமே பிற்போடப் பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது சட்ட ரீதியாக இயங்கும்.

நாம் எவ்வித குழப்பமும் விளைவிக்கவில்லை. சிலர் எம்மை தங்களது சுய இலாபத்துக்காக குழப்பவாதிகள் போல் காட்ட முனைகின்றனர். மட்டக்களப்புக்கு செயலாளர் பதவி கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை சாணக்கியனுக்கு கிடைக்க கூடாது என்று தங்களது முதிர்ச்சி அற்ற தன்மையினை காட்டியிருந்தனர்.

ஜனவரி 21ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ‍தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக 180 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 130 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

தலைவர் தெரிவின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய சுமந்திரனும், சிறீதரனும் நாங்கள் ஒற்றுமையாக பயணித்து, செயல்பட்டு கட்சியை பலப்படுத்துவோம் என்று கூறியிருந்தனர். அதன் பிரகாரமே பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றது.‘‘ என்றார்.