ஜனாதிபதியின் இறுதி ஆசை: எதிர்க்கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு

OruvanOruvan

இறுதியாக ஒருமுறை கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவும், நீக்க முடியாதுள்ள கோப் குழுத் தலைவரின் பதவியை பறிப்பதற்குமே ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைத்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினரான எஸ்.எம்.மரிக்கார் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றுகையில்,

“ஆளும் அரசாங்கம் பாராளுமன்றக் கூட்டத்தொடரை இதுவரை நான்கு முறை ஒத்திவைத்துள்ளது. எத்தகைய முறைகேடுகள் இடம்பெற்றாலும் கோப் குழுவின் தலைவரை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசுக்கு முதுகெலும்பு இல்லை.

பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர் அதற்காகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆணையில் மீண்டும் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதை அறிந்தே இவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொள்கைப் பிரகடன உரையை வழங்காமலேயே ஜனாதிபதி பதவியை பறிகொடுக்க நேரிடும் என்பதற்காக மீண்டும் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார்.

தாம் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாக மாட்டேன் என்பதை அறிந்து ஜனாதிபதி பதவியை முழுமையாக அனுபவிக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கிறார். எதிர்க்கட்சியில் இருந்த போது ஜனநாயகக் கருத்துகளை வெளியிட்ட ரணில் விக்ரசிங்க தற்போது அடக்குமுறையை கடைப்பிடித்து வருகிறார்.‘‘ என என்றார்.