வதைப்படுத்தும் பகிடி தேவைதானா?: வாழ்வை தொலைக்கும் மாணவர்கள்

OruvanOruvan

Is it necessary to Raging

ரேகிங்...!

சீனியர் - ஜுனியர் பாகுபாட்டை இல்லாதொழித்து நட்பு பாராட்டுவதாகவே ஆரம்பத்தில் இந்த பகிடிவதை பார்க்கப்பட்டாலும் காலப்போக்கில் வன்முறை, குற்றங்களுக்கு எண்ணெய் வார்ப்பதாகவே பகிடிவதை பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் மத்தியில் வேர்விட்டிருக்கும் காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டு பல உயிர்களுக்கு உலை வைத்திருக்கின்றது. இலங்கையின் வரப்பிரகாஷ், துசார, விதுரா, அமாலி சதுரிக்கா, இந்தியாவின் நவரசு கொலை இவையெல்லாம் பகிடிவதையின் உச்சக்கட்ட கொடுமைகள்.

இதற்குப் பின்னர் இந்தியாவில் பகிடிவதை தடை செய்யப்பட்டது. பகிடிவதை குற்றமாக அறிவிக்கப்பட்டு பாரியளவில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இலங்கையில் பகிடிவதை தடைசெய்யப்பட்டிருந்தாலும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் பகிடிவதை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது இலங்கையில் மிகவும் மோசமான நிலைமை காணப்படுவதாக ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா பதவியில் இருந்த காலத்தில் அறிவித்திருந்தார்.

ஆறு மாணவர்கள் கைது

இவ்வாறானதொரு நிலையிலே, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி, 1997 எனும் துரித இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சமனலவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பிரிவைச்சேர்ந்த 23, 24 மற்றும் 25 வயதுடைய மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவு

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையான 12 மாதங்களில் மாத்திரம் 36 பகிடிவதை சம்பவங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனோடு தொடர்புடைய 57 மாணவர்களுக்கு குறித்த காலப்பகுதியில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் குறித்த எண்ணிக்கையிலான பகிடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 12 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையிலே, பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க உயர்கல்வி இராஜாங்க அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை பேச்சளவில் மாத்திரம் காணப்படுகின்றது.

விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸாரினால் அண்மையில் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, 076 545 3454 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் மூலம் கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் குறித்து அறிவிக்க முடியும் தெரிவிக்கப்பட்டது.

வாழ்வை தொலைக்கும் மாணவர்கள்

பாரியளவில் பகிடிவதை இடம்பெறுகின்ற போதெல்லாம் அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போர்வையில் அவர்களைப் பகிடி வதைக்கு உட்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதை தடுக்க முடியாமல் இருப்பதாக விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானியாக, வைத்தியராக, வழக்கறிஞராக அல்லது நாட்டுக்கு ஏதோவொரு வகையில் நன்மை பயக்கும் பிரஜையாக வரவேண்டிய மாணவர்கள் வெறும் பகிடி வதையால் உலகைவிட்டு விடைபெறுகிறார்கள். அல்லது கல்வியை இடைநிறுத்திவிட்டு கிடைத்த வேலையை செய்வதற்கு முற்படுகின்றன.

ஆரோக்கியமான சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டுமாயின் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சட்டத்தில் மாத்திரமின்றி மனித மனங்களிலும் மாற்றம் அவசியமாகின்றது.

அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக, வழிகாட்டியாக வாழ வேண்டிய சிரேஷ்ட மாணவர்கள் தாங்கள் அனுபவித்த அந்தக் கொடுமைகளையே தனக்குப் பின்னால் வருபவர்களுக்குள் திணிக்கும் மனம் எங்கிருந்து வருகிறது? இது சமூகத்தின் எழுச்சிக்கு எத்தனை ஆரோக்கியமானது?