நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணை: முன்வைக்கப்பட்டுள்ள 75 புதிய நிபந்தனைகள், இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி

OruvanOruvan

IMF

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள இரண்டாம் தவணை கடன் தொகைக்காக 75 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட முதலாம் தவணை கடன் தொகை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாத 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை புதுப்பிக்க அல்லது நீடிக்கவும் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியத்தின் முதலாம் தவணைக் கடன் தொகை வழங்கப்பட்ட போது, இலங்கை அரசாங்கத்திடம் 73 நிபந்தனைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டின் நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய குறித்த 73 நிபந்தனைகளில் 60ஐ இலங்கை தாமதத்துடன் நிறைவேற்றியுள்ளது என்றும் நிறைவேற்றப்படாத 13 நிபந்தனைகளில் 8 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதியுள்ள 5 நிபந்தனைகள் கடுமையான நிபந்தனைகள் என்பதால் அவற்றை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி, 75 புதிய நிபந்தனைகளும், கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 27 நிபந்தனைகளும், நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 8 நிபந்தனைகளும் ஒன்றிணைக்கப்பட்டு இரண்டாம் தவணைக் கடன் தொகைக்காக 110 நிபந்தனைகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.