நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: இன்றைய வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Today's North-East News

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்க இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக அமைப்பினர் கலந்துகொண்டனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகியின் தாயார் காலமானார்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று(28) காலமானார்.

இந்திய குடியரசுதின நிகழ்வின் சிறப்பு அதிதியாக வடக்குமாகாண ஆளுநர் பங்கேற்பு

பாரதநாட்டின் 75வது குடியரசு தின நிகழ்வு இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கண்டாவளை பேருந்து விபத்தில் இரு பெண்கள் காயம்

பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை பிரதேசத்தில் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் ஆடை தொழிற்சாலையில் பணிப்புரியும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

38 பெண் ஊழியர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்து நேற்று பிற்பகல் வீதியை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண விளையாட்டு வீரர்கள்

தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.