ராஜபக்சவினருக்கு உண்மையான தேசிய உணர்வு இல்லை: தேசிய உணர்வை இலாபத்திற்காக பயன்படுத்தினர்-திலித் ஜயவீர
மகிந்த ராஜபக்ச என்பவர் பயங்கரவாதம் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற நிலைப்பாட்டை மனதில் கொண்டிருந்த விசேட பங்கை ஆற்றிய நபர் என்றாலும் ஜனரஞ்சக அரசியலில் ஒரு பகுதியாகவே அவர் அந்த நிலைப்பாட்டுக்கு வந்ததாகவும் உண்மையான தேசிய உணர்வு காரணமாக அல்ல எனவும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மௌபிம ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் குரக்கன் சால்வை தேசியவாத சித்தாந்ததை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவர் அந்த தேசியவாத சித்தாந்தத்தை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டவர் அல்ல.
எனினும் ஒப்பீட்டளவில் எடுத்துக்கொண்டால் எமது தேசியத்திற்கு மிகப் பெரிய சேவையை செய்த நபராக மகிந்த ராஜபக்ச வரலாற்றில் இடம்பெறுவார்.
அவர் தேசிய அடையாளங்கள் தொடர்பில் அறிந்தோ அறியாமலோ செயற்பட்டிருந்தாலும் ராஜபக்சவினருக்கு குறைந்தளவில் கூட தேசிய உணர்வு இருக்கவில்லை. அவர்கள் தேசியவாத உணர்வை இலாபத்திற்காக பயன்படுத்தினர் .
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச, தேசியம் மற்றும் நாகரிக கருத்தியலுக்கு எதிராக பக்கத்தில் இருக்கின்றார்.
இலங்கைக்கே உரிய நாகரிகம் இருக்கின்றது. அந்த நாகரிகம் எமது வாழ்வியல் முறை என்பதை எந்த விதத்திலும் அவர் நம்பமாட்டார். இதனால், இந்த தவறை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.
இதனால், எம்மால் முடிந்தளவில் ஒரு சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்சவை தேசியவாத சித்தாந்ததிற்குள் கொண்டு வந்து, அதனுடனாக தேசியத்தை வலுப்படுத்த முயற்சித்தோம்.
எனினும் அவர் பதவிக்கு வந்த பின்னர் அவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரும் மோதிக்கொண்டனர்.பசில் ராஜபக்ச வெளிநாட்டவர்.
இதனால், தேசியவாதத்தின் முகாமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடர்ந்தும் கருதக்கூடாது எனவும் திலித் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.