இரயில் சரக்கு கட்டணம் அதிகரிப்பு: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...
இரயில் சரக்கு கட்டணம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரயில் சரக்கு கட்டணம் மற்றும் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, போக்குவரத்து கட்டணத்திற்கு மேலதிகமாக பொருளின் பெறுமதியின் படி பிறிதொரு கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இலங்கையில் ஊழல் நிறைந்த நிறுவனமாக பொலிஸ் அடையாளம்
நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனமாக இலங்கை பொலிஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் பேராசிரியர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த பட்டியலில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிம்புலா ஹெலே குணாவின் அனுராதபுரம் அக்கா கைது
பாதாள உலகக்குழு தலைவரும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல்காரருமான கிம்புல ஹெலே குணாவின் ஹெரோயின் விற்பனை வலையப்பின் அனுராதபுரம் பிரதேசத்தில் வியாபாரத்தை மேற்கொண்டு வரும் அக்கா என அழைக்கப்படும் பெண்ணையும் அவரது கணவரையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேனவின் ஆலோசனைக்கு அமைய அனுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த புஷ்பகுமாரவின் கண்காணிப்பின் கீழ் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
சுமார 5 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குற்ற விசாரணைப் பிரிவிரன் 29 மற்றும் 33 வயதான இந்த சந்தேக நபர்களை அத்துருகிரிய -மில்லேனியம் சிட்டி வீடமைப்பு தொகுதியில் தங்கிருந்த இவர்களை 40.2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் பெற்ற குற்றத்துக்கான அபராத தொகை அதிகரிப்பு
தேர்தலின் போது வாக்குகளைப் பாதிக்கும் நோக்கில் இலஞ்சம் பெற்ற குற்றத்துக்கான அபராத தொகையை அதிகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அபராதம், முன்பு 500 ரூபாவாக இருந்தது. தற்போது 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூன் மாத இறுதிக்குள் இலங்கையில் பாதாள உலகம், போதைப் பொருள் விநியோகம் முடிவுக்கு கொண்டுவரப்படும்
எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் இலங்கையில் பாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் விநியோகம் என்பன முடிவுக்கு கொண்டுவரப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எப்படியான அழுத்தங்கள் வந்தாலும் யுக்திய நடவடிக்கையை நிறுத்த போவதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே நாட்டுக்குள் தற்போது போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவில் 13 இலங்கை மீனவர்கள் கைது
மாலைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையின் இரண்டு மீன்பிடி படகுகளுடன் 13 மீனவர்கள் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள இரண்டு படகுகளில் ஒரு படகில் 7 மீனவர்கள் இருந்துள்ளதுடன் மற்றைய படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளனர். தற்போது Filladhoo தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளுடன் இலங்கை மீனவர்கள் மலேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாலைதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
வெள்ளவத்தை கடல் பகுதியில் முதலை - மக்களுக்கு எச்சரிக்கை
வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்மித்த கடல் பகுதியில் முதலை ஒன்று சுற்றித்திரிவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பலகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யுக்திய சுற்றிவளைப்பு - மேலும் 803 பேர் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 803 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 562 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 241 சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்த துப்பாக்கி சூட்டு சம்பவம் - மேலும் ஒருவர் கைது
பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காலி – ரத்கம பகுதியில் வைத்து 30 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை, சம்பவத்தின் பின்னர் எடுத்துச் சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொலன்னறுவையில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு
பொலன்னறுவை பிரதேசத்தில் டிப்பர் ரக- பார ஊர்தி மோதியதில் இளைஞனொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகன விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பாளை பிரதேசத்தில் வசித்து வந்த அன்வர் அப்ரான் (17) என்ற இளைஞன் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்
இன்றைய வானிலை
நாட்டில் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது சுமார் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கிராம உத்தியோகத்தர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியீடு
2,002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 2, 2023 அன்று நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு 👉 www.moha.gov.lk