செங்கடல் நெருக்கடி: கொழும்பில் நங்கூரமிடும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

OruvanOruvan

Red Sea Crisis - Colombo port

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, துறைமுகத்தின் கொள்ளளவு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் ஜெயபாலு முனையத்திற்கு விசேட கள விஜயமொன்றை மேற்கொண்ட நிலையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிலவும் போர்ச்சுழல் காரணமாக சூயஸ் கால்வாய் ஊடாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது.

மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசிய பிராந்தியங்களுக்கான கப்பல் பாதையில் முக்கிய துறைமுகமாக கொழும்பு அமைந்துள்ளது.

இந்த நிலையில், கப்பல்களை பாதுகாக்கும் வகையில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு கப்பல் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் நேற்று (28) மாத்திரம் 24 கப்பல்கள் நங்கூரமிடுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், துறைமுகத்திற்கு வெளியே சுமார் 10 கப்பல்கள் நங்கூரமிட்டு காத்திருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.