எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து எம்.பி.க்கள் பலர் பின்வாங்கல்?: வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமையே காரணம்
பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தீர்மானித்துள்ளனர்.
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய முப்பது வீதமானோர் அவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான எம்.பி.க்கள் அதிக பணம் செலவழித்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாகவும் அவர்களில் பலர் எம்.பி.யாக தெரிவான பின்னர் வழங்கப்படும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தின் மூலம் தங்கள் தேர்தல் செலவை ஈடுகட்டிக் கொள்வதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் தேர்தல் செலவுக்கான பணத்தை ஈடுகட்டிக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன் காரணமாக தேர்தலுக்கு முன் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படா விட்டால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என எம்.பி.க்கள் பலர் தீர்மானித்துள்ளனர்.
இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியில் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான பண ஒதுக்கீட்டை நிதியமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வௌியிடும் போது, எம்.பி.க்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.