தமிழரசு கட்சி விரும்பினால் எம்முடன் இணைந்துகொள்ளலாம்: பெயரையும் மாற்ற முடியும், கூட்டமைப்பில் இருந்து காணாமல் போன கட்சிகள்

OruvanOruvan

இலங்கை தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன், இணைந்து செயற்பட முடியும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழரசு கட்சி விரும்பினால் முன்னணியின் பெயரை மாற்றம் செய்யலாம் எனவும் கூட்டணியின் யாப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அது குறித்து விவாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி பதிவு செய்த கட்சி. அதற்கு பொதுச் சின்னம் உள்ளது. கட்சியில் இணைவதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்து இணங்கத்திற்கு வரமுடியும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலக் கட்சிகளின் கூட்டாக இருந்தது. இன்று அதற்குள் எந்தக் கட்சிகளும் இல்லை. கூட்டமைப்பை பதிவுசெய்ய வேண்டுமாக இருந்தால் அந்தக் கட்சியில் இருந்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

ஆனால், கூட்டமைப்பில் இருந்தவர்கள் ஏற்கனவே ஒரு ஐக்கிய முன்னணியை உருவாகியுள்ளனர். அதனை பதிவும் செய்துள்ளனர். ஆகவே இன்னொரு ஐக்கிய முன்னணி தேவையா என்ற கேள்வியெழுகின்றது.

இதனிடையே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய ஏனைய கட்சிகளும் இணங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பது தவறான விடயமாகும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற கேள்வியெழுந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஜனாதிபதியின் அழைப்பை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளாது என்றே நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.