சீனாவின் உதவியில் இலங்கைக்கு வீடுகள்: நிர்மாணப் பணிகள் மார்ச்சில் ஆரம்பம்
சீன அரசாங்கத்தின் உதவியுடன் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளைக் கொண்ட திட்டத்தினை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த வீடுகள் குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த வீட்டுத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி திட்டத்தின் ஆரம்ப பணிகளை முடிக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மூன்று ஆண்டுகளில் நிர்மாணிக்கப்படும் இந்த 1,996 வீடுகளில் 1,888 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் 108 வீடுகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.
இதன்படி, பேலியகொடையில் 615 வீடுகளும், தெமட்டகொடயில் 586 வீடுகளும், மொரட்டுவையில் 575 வீடுகளும், மஹரகம பகுதியில் 112 வீடுகளும், கொட்டாவ பகுதியில் 108 வீடுகளும் கட்டப்படவுள்ளன. கொட்டாவ பகுதியில் அமைக்கப்படும் 108 வீடுகளே கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் (இலங்கை நாணய மதிப்பில் 24.48 பில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கவுள்ளது. எட்டு இடங்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டத்தில், இரண்டு இடங்களுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏனைய இடங்களில் நிலவிய பிரச்சினைகள் காரணமாக குறித்த இடங்கள் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்படாமல் இருந்தது. தற்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இடங்கள் தொடர்பில் அமைச்சரவை அனுமதியை பெறுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.