வீதியில் நடந்து சென்ற இளைஞன் மயங்கி விழுந்து மரணம்: யாழ்ப்பாணம் கீரிமலையில் சம்பவம்

OruvanOruvan

Dead Body

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞன், யாழ்ப்பாணத்தில் வீதியில் மயங்கி விடுத்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற இந்த இளைஞன், மயங்கி விழுவதற்கு முன்னர் வாந்தி எடுத்துள்ளதுடன் பின்னர் மயங்கி விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த இந்த இளைஞன், யாழ்ப்பாணம் கீரிமலை பிரதேசத்தில் தங்கி தொழில் புரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.

வீதியில் இருந்தவர்கள் உடனடியாக இளைஞனை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைகளை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்டார்.

எனினும் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என்பதால், அவரது உடலின் உட்பாகங்களின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் பொலிஸார், இளைஞனின் உடலை இறுதி சடங்குகளை நடத்துவதற்காக உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

சடலத்தை தகனம் செய்யாது அடக்கம் செய்யுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.