இலங்கையில் கடந்த ஆண்டில் 1502 சிறுமிகள் வன்புணர்வு: 167 பேர் கர்ப்பம், அலட்சியமாக செயற்படும் பெற்றோர்

OruvanOruvan

இலங்கையில் கடந்த 2023ம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து ஐநூற்றி இரண்டு சிறுமிகள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், மேற்கண்ட வன்புணர்வுக்கு உள்ளான சிறுமிகளில் 167 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்.

ஆனாலும் பல சம்பவங்களில் குறித்த சிறுமிகளின் பெற்றோர் அல்லது குடும்பத்தினர் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதில் அலட்சியமாக செயற்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குழந்தைகள் மற்றும் பெண்கள் அது தொடர்பான தகவல்களை வழங்க 109 என்ற தொலைபேசி எண்ணையும் பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

“இந்த தனிப்பட்ட எண் மூலமான சேவை உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் பெண் அதிகாரிகளால் கையாளப்படுகிறது.

எனவே தயக்கமின்றி அவ்வாறான சம்பவங்கள் குறித்து மகளிர் அல்லது அவர்களின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குழந்தை வன்கொடுமைகளைத் தடுக்கவும், பாலியல் குற்றவாளிகள் பட்டியலைத் தொகுக்கவும் அரசாங்கம் சட்டங்களை மேம்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.