ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து விரட்டும் பணிகள் ஆரம்பமா?: ரணிலுக்கு ஆதரவான புதிய அரசியல் கூட்டணி அங்குரார்ப்பணம்

OruvanOruvan

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான புதிய அரசியல் கூட்டணி இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தலைமையில் இன்று காலை ஜா-எல நகரில் குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், பியங்கர ஜயரத்ன, நிமல் லான்சா ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணியின் பல முன்னாள் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக பல்வேறு கட்சிகள் மற்றும் பல முக்கிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 71 சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களையும் புதிய கூட்டணியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

தற்போது புதிய கூட்டணியில் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான கட்சிகள் இணைந்துள்ளதுடன், பல முஸ்லிம், தமிழ் கட்சிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், புதிய கூட்டணியின் ராஜகிரிய கட்சியின் தலைமையகத்தில் அனுர யாப்பா தலைமையிலான 20 சிறு கட்சிகள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அந்த குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

இதன்போது, "எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், எங்கள் அணியில் எவரும் மீண்டும் பெயர் பெறுவதற்கு உழைக்கவில்லை, நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை வெற்றி கொள்கிறோம்" என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று புதிய அரசியல் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.