அல்-கைதா அமைப்புக்கு உதவிய நபர்கள்: கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள சிகப்பு பிடியாணை
அல்-கைதா அமைப்பின் வளர்ச்சிக்காக உதவி, ஒத்துழைப்புகளை வழங்கிய நிலையில்,தற்போது வெளிநாட்டில் இருக்கும் நான்கு பேரை கைது செய்யுமாறு உத்தரவிட்டு, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று ஆங்கில மொழியில் சிகப்பு பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சிகப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாக கூறப்படும் அஹமட் கலீல் லுக்மான் தலீப்,அஹமன் லுக்மான்ட் ஹலீன், அப்துல் பாஹின் மொஹமட் லெப்பே, மொஹமட் பாஹீர் ரிப்பான் ஆகிய சந்தேக நபர்களை கைது செய்வதற்காகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கம்பஹா மாவட்டம் கல்ஹெலிய மற்றும் கலகெடிஹேன பிரதேசங்களை சொந்த இடமாக கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-கைதா அமைப்புக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் 16 பேருக்கு எதிராக கடந்த 2021 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்தனர். இவர்களில் நான்கு பேருக்கு எதிராகவே இந்த சிகப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மேலும் 5 சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதுடன் அந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முதலாம், 2 ஆம்,9 ஆம் மற்றும் 16 வது சந்தேக நபர்களே வெளிநாட்டில் இருப்பதாக நீதிமன்றத்தில் சத்திய கடிதத்தை தாக்கல் செய்து சாட்சியமளித்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.