அரச அதிகாரிகள் பயங்கரவாதிகள் போல் செயற்படுகின்றனர்: ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

OruvanOruvan

Former Minister Ravi Karunanayake

நாட்டின் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி மக்களை சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி வருவதன் மூலம் அரச அதிகாரிகளின் பயங்கரவாதம் தெளிவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் 17 லட்சம் அரச அதிகாரிகள் இருக்கின்றனர். இந்தளவு பாரிய அரச சேவை நாட்டுக்கு தேவையா?.

அரச அதிகாரிகளின் சம்பளம்,கொடுப்பனவுகள்,சிறப்புரிமைகள் மற்றும் வசதிகளுக்காக நாட்டில் வாழும் அனைவரும் பெருந்தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

அரச சேவையில் உள்ள சிலர் தமது கடமையை சரியாக செய்கின்றனர். எனினும் பெரும்பாலான அரச அதிகாரிகள், சம்பளம், கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகளை பெற்றுக்கொண்டு எந்த வேலைகளையும் செய்யாமல் இருக்கின்றனர்.

அரச அதிகாரிகளுக்கு பொறுப்பு இருக்கின்றது. அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றுகிறார்களா?.

உதாரணமாக தொழில்சார் நிபுணர்கள் நாட்டில் இருந்து வெளியேறுதை தடுக்க மருத்துவர்கள், பல்கலைக்கழக சமூகத்தின் சம்பளத்தையும் கொடுப்பனவையும் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தூரநோக்கு கொண்ட தீர்மானம் ஒன்றை எடுத்தது. எனினும் அரச அதிகாரிகள் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாது காலை பிடித்து இழுக்கின்றனர்.

உண்மையில், அரச அதிகாரிகளின் இந்த தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளார்.