சனத் நிஷாந்தவின் எம்.பி பதவி வெற்றிடம்: 40 சொற்களில் நாளாந்த செய்தி

OruvanOruvan

Short news 2024.01.27

சனத் நிஷாந்தவின் எம்.பி பதவி வெற்றிடம்

புத்தளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உயிரிழந்துள்ளதால் வெற்றிடமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் தொடர்பில் பாராளுமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (ஜன.26) தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்துப்பூர்வமாக இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

12 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற ரீதியில் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் இறுதிக்குள் அழிக்கப்படும் போதைப்பொருட்கள்

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், வனாத்தவில்லுவவில் போதைப்பொருள் அழிவுக்குத் தேவையான சகல வசதிகளுடன் கூடிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உ/த பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம்; மேலும் ஒருவர் கைது

2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் மொரட்டுவ மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட உயர்தரப் பரீட்சை நிலையத்தில் பிரதானி என பொலிஸார் தெரிவித்தனர்.

சமிந்த விஜேசிரியின் உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு அறிவித்தல்

மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் உள்ள வீட்டை பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் காலி செய்யுமாறு முன்னாள் எம்.பி. சமிந்த விஜேசிரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 9 ஆம் திகதி, அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமையும் குறிப்படத்தக்கது.

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 818 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டுள்ள யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 8 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் 159 கிராம் ஹெரோயின், 112 கிராம் ஐஸ் மற்றும் 329 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னைய வைத்தியசாலைகளை சிறைச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை

இலங்கையின் முன்னைய தொழுநோய் வைத்தியசாலைகள் இரண்டை தற்காலிக சிறைக்கூடங்களாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹெந்தலையிலுள்ள தொழுநோயாளர் வைத்தியசாலையின் சில கட்டடங்களும், மட்டக்களப்பில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை கட்டடமும் தற்காலிக சிறைக்கூடங்களாக மாற்றப்படவுள்ளன. சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சனத் நிஷாந்தவின் மெய்ப்பாதுகாவலருக்குப் பதவியுயர்வு

அதிவேகப் பாதை வீதி விபத்தில் உயிரிழந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் மெய்ப்பாதுகாவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த அமைச்சரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஜே.ஏ. ஜயகொடி (72542) தற்போது பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட நான்கு இலங்கையர்களைக் கைது செய்ய சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

கடந்த 2021 ஆம் ஆண்டில், பயங்கரவாதத் தடுப்புப் விசாரணைப் பிரிவு அவ்வாறான பத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அவர்களில் நான்கு பேர் நாட்டை விட்டும் வெளியேறியிருந்தனர்.

கல்எளிய, கலகெடிஹேன பிரதேசங்களில் வசித்த, தற்போதைக்கு அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிப்பதாகவும் கூறப்படும் தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கும் மேலும் இருவருக்கும் எதிராக இந்த சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் கடும் குளிர் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியம் 12.00 மணிக்கு மணிக்கு பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.