இலங்கையில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட சட்டம்: தலையிடியில் ரணில் ; சபாநாயகரை சந்திக்கும் சஜித்

OruvanOruvan

இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை இணையதளங்கள் மற்றும் சமூக வலையதளங்களை கட்டுப்படுத்தும் நிகழ்விலை காப்புச் சட்டம் (online safety bill) நிறைவேற்றப்பட்டது.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவும் ஒரே ஒரு எம்.பியை கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியுமே இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிராகவே வாக்களித்திருந்தன.

அரசாங்கத்துக்கு கடும் எதிர்ப்பு

ஆசிய இணைய சேவைகளின் கூட்டமைப்பு உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் சிவில் அமைப்புகளும் இந்தச் சட்டம் கடுமையான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோரியிருந்தன.

OruvanOruvan

Ranil Wickremesinghe

உயர்நீதிமன்றமும் சட்டமூலத்தில் 34 சரத்துகளை திருத்தங்களுக்கு உட்படுத்த வேண்டுமென வியாக்கியானம் வழங்கியிருந்தது. பல தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாங்கம் சில திருத்தங்களுடன் சட்டமூலத்தை நிறைவேற்றியிருந்தது.

இதனால் அரசாங்கத்துக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றன. சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுப்படுத்திய பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தலையிடியாக மாறக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நாட்டில் நடைபெற வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வெடிக்கப்போகும் போராட்டங்கள்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதால் நிகழ்நிலை காப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அரசாங்கத்தக்கு தலையிடியாக மாறுமென அரசியல் விமர்சகர்கள் கூறும் பின்புலத்தில் சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்த ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.

OruvanOruvan

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்றை நடத்தியது. வரும் நாட்களில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு விடும் பல போராட்டங்கள் நாடு முழுவதும் ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றன.

சபாநாயகரிடம் எதிர்ப்பு வெளியிட போகும் சஜித்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை அங்கீகரிக்க முன் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த சில திருத்தங்களுக்கு அரசாங்கம் இடமளிக்காததால் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்த எமது கட்சி தீர்மானித்துள்ளது.‘ என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எம்.பிகள் குழு விரைவில் சபாநாயகரை சந்தித்து கலந்துரையாட உள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், சபாநாயகரை சட்டமூத்துக்கு சான்றழிக்க கூடாது.‘‘ வலியுறுத்தியுள்ளார்.