புத்தாண்டை கொண்டாட தயாராகும் சீனா: 15 நாள் 30 நாளானது ; சிங்கப்பூர் அளித்த புத்தாண்டு பரிசு

OruvanOruvan

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான விசா விலக்கு சீனப் புத்தாண்டு விடுமுறையான பிப்ரவரி 9ஆம் திகதி முதல் தொடங்க உள்ளது. நேற்றைய தினம் (ஜனவரி 25ஆம் திகதி) இதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

சிங்கப்பூர் மற்றும் சீனாவில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் ஒருவர் மற்றவர் நாட்டுக்குள் நுழைய முடியும். ஒப்பந்தத்தின் பிரகாரம் முப்பது நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க இரு நாடுகளும் அனுமதிக்கும்.

இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான வருடாந்தர உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சீனாவுக்குச் சென்றபோது இந்த விசா விலக்கு பற்றி முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஒத்துழைப்பு, கூட்டுத் திட்டங்கள் பற்றி பேசப்பட்டது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூரர்களுக்கான 15 நாள் விசா இல்லாத கொள்கையை சீனா மீண்டும் ஜூலை 2023ல் அமல்படுத்தியது.

புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜனவரி 25ஆம் திகதி முதல் 30 நாள் விசா இல்லாத் திட்டம் தொடங்கும். சீனா தற்போது சிங்கப்பூர் உட்பட குறைந்தது 22 நாடுகளுடன் விரிவான, பரஸ்பர விசா விலக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

2019ல் 3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட சீன சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். ஆனால், கொவிட்-19க்குப் பிறகு சீனப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாத்துறை கூறுகிறது.

எதிர்வரும் பிப்ரவரி 10ஆம் திகதி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டுக்கு சீனா தயாராகிவரும் பின்புலத்தில் விசா விலக்கு வசதியை சிங்கப்பூர் சீனாவுக்கு அளித்துள்ளமையை புத்தாண்டு பரிசாக பார்க்கப்படுகிறது.