மாற்று யோசனைகள் இருக்குமாயின் ‍ஐ.எம்.எப். உடன் கலந்துரையாடலுக்கு தயாராகுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

OruvanOruvan

Ranil Wickremesinghe

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மீண்டும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான உடன்படிக்கையுடன் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) முற்பகல் இடம்பெற்ற சர்வதேச சுங்க தின நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் சிறந்த சேவையை ஆற்றிய சுங்க அதிகாரிகளைப் பாராட்டி சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

இந்நாட்டின் அரச வருமானத்திற்கு விசேட ஏற்றுமதிப் பங்களிப்பை வழங்கிய நிறுவனங்களும் ஜனாதிபதியால் பாராட்டப்பட்டது.

அதனையடுத்து சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

சுங்கத் திணைக்களம் இலங்கையின் பழமையான அரச திணைக்களங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் பழைய மாந்தை துறைமுகத்தில் சுங்க வரி அறவிடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

எனவே அன்றிலிருந்து அனுராதபுர காலத்திலும், கோட்டே காலத்திலும், கண்டி காலம் முதல் இன்று வரை இந்த நாட்டின் இருப்புக்கு சுங்க வருமானம் பாரிய அளவில் பங்களித்துள்ளது.

2022 இல் நாம் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உதவுவதற்கு சுங்கத் திணைக்களம் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி கூற வேண்டும்.

சுங்க வரி, வற் வரி மற்றும் வருமான வரி ஆகியவை உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் மூன்று முக்கிய வருமான மூலங்களாக உள்ளன. இன்று சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள், பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற அனைத்தின் மூலமும், நாம் எவ்வாறு வருமானத்தை அதிகரிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு தற்போதைய சுங்கச் சேவைகள் திறம்பட செயல்பட வேண்டும்.

சுங்கத் திணைக்களத்திற்கு கூடுதல் பணியாளர்களை வழங்க முடியாவிட்டாலும், செயல்திறன் ஊடாக எந்தளவு வருமானத்தை அதிகரித்துள்ளமை சிறப்புக்குரியது. நாம் இன்னும் வெகுதூரம் முன்னோக்கிச் செல்ல வேண்டும், விரைவில் நாம் கொண்டு வரவிருக்கும் புதிய சட்டத்தின் ஊடாக சுங்கம் மற்றும் ஏனைய வருமானத் திணைக்களங்களை முழுமையாக நவீனமயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது என்பதைக் கூற வேண்டும். 2022இல் பொருளாதாரம் வீழ்ந்தது. எனினும், 2023இல் நாம் எடுத்த முடிவுகளினால் அந்த வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான வழி ஏற்பட்டது.

ஆனால், அது இன்னும் முடியவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக்குவோம். 2026இல் அதனை 15%ஆக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

எனவே தற்போதைய பொருளாதாரத்தில் இருந்து வருமானம் ஈட்ட வேண்டும். வருமானத்தை அதிகரிக்க, பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைவது என்ற கேள்வியை இன்று நாம் எதிர்கொண்டுள்ளோம்.

பழைய பொருளாதார முறையால் நாட்டை முன்னேற்ற முடியாது. ஒவ்வொரு நாளும் கடன் வாங்குவதால் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. இந்த பொருளாதார முறையை மாற்ற வேண்டும்.

நாம் இன்னும் கடினமான காலத்திலேயே இருக்கிறோம். 2021இல் எங்களிடம் அத்தியாவசிய பொருட்கள் இருக்கவில்லை. எம்மிடம் உரம், எரிபொருள் இருக்கவில்லை. ஆனால் இன்று அவை உள்ளன. அதற்கு பணம் வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் இன்னும் வாழ்க்கைச் சுமையை உணர்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியுடன் இந்தப் பிரச்சினைகள் குறையும். 2022இன் பொருளாதாரச் வீழ்ச்சியில் இருந்து ஒரே தடவையில் மீள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அது முடியாது. எனவே நாம் புதிய பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும்.

போட்டிச் சந்தையுடன், ஏற்றுமதியை அதிகரிக்கவும், அன்னியச் செலாவணியை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெப்ரவரி 03 ஆம் திகதி தாய்லாந்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளோம். நம் நாட்டைப் போலவே தாய்லாந்தும் தேரவாத பௌத்த நாடு. ஆனால் அவர்கள் தனி வழியில் சென்றனர். நாங்கள் வேறு வழியில் சென்றோம். அதன் வேறுபட்ட பலன்களை இன்று காண்கிறோம்.

நாம் எடுக்கும் தீர்மானங்களினால் இந்த நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் எவ்வாறு அமையும் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாம் கலந்துரையாட வேண்டும். அவை பற்றி அரசியல் கட்சிகள் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றால், இந்த நாட்டின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நிலவிலிருந்து அரிசி கொண்டுவருவதாக கட்டுக் கதைகளை கூறி அதனை செய்ய முடியாது. தற்போது எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இணங்க முடியுமா? அல்லது அவற்றை மாற்றியமைக்க வேண்டுமா? என்பது தொடர்பில் ஆலோசிக்க வேண்டும்.

நாம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை கைசாத்திட்டுள்ளோம். அந்த ஒப்பந்தம் இன்னும் 15 – 16 நாடுகளுடன் கைசாத்திடப்படவுள்ளது. அதிலிருந்து நாம் விடுபட்டுச் செல்ல முடியாது. அதனை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அது தொடர்பில் நாம் அனைவரும் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் இன்றும் எமது அரசியல், அப்பளத்தை போலவே உள்ளது. பொரித்தவுடன் அதனை எடுத்து சாப்பிடுகிறோம். மறுதினம் மற்றொன்றை போடுகிறோம் பின்னர் அதனை மறந்துவிடுவோம்.

சமூக ஊடகங்கள் தொடர்பிலான சட்டம் கொண்டுவரப்பட்ட போது நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனக் கூச்சலிட்டனர். இருப்பினும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதனை அனைவரும் மறந்துவிட்டனர். அதேபோல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்பிக்கப்படவுள்ளது. இதன்போதும் மக்களின் உரிமை மீறப்படுகிறது, அனைவரையும் சிறையில் அடைக்க போகிறார்கள் எனக் கூச்சலிடுவர். பின்னர் அதை மறந்துவிடுவார்கள்.

அதன் பின்னர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் சமர்பிக்கப்படும் போது கல்வி ஒழிக்கப்படுவதாக கூச்சலிடுவர். பின்னர் மறந்துவிடுவார்கள். அப்பளத்தை போல் மேலே வந்த பின்னர் சத்தம் குறைந்துவிடும். இந்த அரசியலுக்கு என்னால் முடிவுகட்ட முடியாது. இருப்பினும் அவ்வறான அரசியலே எமது நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்பதை கூற முடியும்.

எமது நிலையிலிருந்து எழுந்து முன்னேறிச் செல்வதற்கான இயலுமை எமக்கு இருக்க வேண்டும். அதனால் உங்களுடைய எதிர்காலம் மாத்திரமின்றி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் சிறக்கும். அதனால் சர்தேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் அவசியமா? இல்லையா? மாற்றங்கள் அவசியமா என்பதை பாராளுமன்றத்தில் ஆலோசிக்க வருமாறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரை இங்கு அழைக்கவும் நாம் தயாராக இருக்கிறோம். அவருடன் அனைவரும் கலந்தாலோசிக்கலாம். ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான வழிகள் இருந்தால் அதனை எவ்வாறு செய்யலாம் எனக் கூறுங்கள். நல்ல திருத்தங்களை நாம் ஏற்றுக்கொள்வோம். இருப்பினும் தற்போதுள்ள ஒப்பந்தத்திற்கு அமைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் ஆர்.டி.பெரேரா, உதவி சுங்க பணிப்பாளர் சுதத்த சில்வா உள்ளிட்டவர்களுடன் சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.