கொள்ளுப்பிட்டி ஆர்ப்பாட்டத்தில் மர்ம நபர்கள்: ஒருவர் மீது சரமாரி தாக்குதல், பெண்களிடம் கடும் வாக்குவாதம்

OruvanOruvan

பொலிசாரின் ‘யுக்திய’ பொலிஸ் விசேட நடவடிக்கைக்கு எதிராக கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மர்ம நபர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது திடீரென்று அப்பகுதிக்கு வந்த ஒரு குழுவினர் போராட்டத்தைக் குழப்பியடிக்க முற்பட்டுள்ளனர்.

முகமூடி அணிந்த சில ஆண்கள் போராட்டக்காரர்களை குழப்ப முயன்றதுடன், அவர்களின் போராட்டத்தை நிறுத்துமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த மர்ம நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரையும் தாக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடமும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மர்ம நபர்கள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி அடாவடித்தனம் செய்து கொண்டிருந்த சமயத்தில் நீண்ட நேரம் கழித்து அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் , குண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய குற்றச்சாட்டில் எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது