சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல் களம்: ஜனாதிபதி பதவிக்கு நான்கு எழுத்து வேட்பாளர், சஜித் அணியே தோற்றுப் போகும்

OruvanOruvan

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க அணியில் பலர் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ரொஷான் ரணசிங்கவின் புதிய அரசியல் அணியுடன் இணைந்து செயற்படும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் நேர்மையான அரசியல்வாதிகள் எங்கள் அணியில் இணைந்துள்ளனர்.

எங்களது அரசியல் முன்னணி மூலமாக தேர்தலில் முன்னிறுத்தப்படும் வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார். அதற்காக தலைமைத்துவ மட்டத்தில் தற்போதைக்கு மூன்று பேர் தயாராக இருக்கின்றனர்.

ரொஷான் ரணசிங்க அணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது லலித் எல்லாவல நேரடியாக பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக மூன்று எழுத்தைக் கொண்ட பெயர் கொண்டவர்கள் மூவரும் நான்கு எழுத்தில் பெயர் கொண்ட ஒருவரும் தயாராக இருக்கின்றனர்.

நான்கு எழுத்தில் பெயர் கொண்டவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி தேசிய மக்கள் சக்தியும் அவரிடம் தோற்றுப் போகும் என்றும் லலித் எல்லாவல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.