லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார்மயப்படுத்த தீர்மானம்: 700 கோடி ரூபாவிற்கு மேல் இலபாம், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான விருப்பமனு கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கொழும்பில் இன்று (26) நடத்திய ஊடக சந்திப்பில் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் அக்காலப் பகுதியில் நிறுவனம் நட்டத்தில் இயங்கியதன் காரணமாக அதனைக் கையேற்க தனியார் முதலீட்டாளர்கள் எவரும் முன்வரவில்லை.
இந்நிலையில் கடந்த வருடம் லிட்ரோ நிறுவனம் 700 கோடி ரூபாவுக்கும் அதிகமான இலாபத்தைப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் நிறுவனத்தை தனியார் துறையினருக்குக் கையளிப்பதற்கான விருப்ப மனு கோரப்பட்டுள்ளதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் பொதுமக்களுக்கு உரிய முறையில் கேஸ் விநியோகத்தை மேற்கொள்வதே தமது எதிர்பார்ப்பு என்றும், நிறுவனத்தை தனியார் மயப்படுத்த தமக்கு எதுவித உத்தேசமும் இல்லை என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்
எனினும் அமைச்சரவை மூலம் தேசிய மட்டத்திலான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது தான் அதற்குக் கட்டுப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்