'ஆயுதக் குழு மோதலில் ஈடுபாடு' பணியில் இருந்த இராணுவ சிப்பாய் கைது: 40 சொற்களில் நாளாந்த செய்தி

OruvanOruvan

Short Story 26.01.2024

'ஆயுதக் குழு மோதலில் ஈடுபாடு' பணியில் இருந்த இராணுவ சிப்பாய் கைது

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரிடம் போதைப் பொருளான கிறிஸ்டன் மெத்தாப்படமைன் (crystal methamphetamine ) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியான விவகாரம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் பெ்பரவரி மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதான நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான நவோமி விக்ரமரத்ன தலைமையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னரே கைதான மூன்று சந்தேகநபர்களையும் விளக்கமயிலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

செல்பி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு பலத்த காயம்

ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற 25 வயதான ரஷ்ய பெண் சுற்றுலா பயணி ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் பலத்த காயமடைந்துள்ளார்.

ஹிக்கடுவையில் இருந்து எல்லைக்கு பயணித்த ரயிலிலேயே இந்த அசம்பாவித சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கடற்படை வீரரின் தாக்குதலால் மாமியார் பலி

அனுராதபுரம், வாஹல்கடவில் நேற்றிரவு (25) மனைவியின் தாயாரை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 54 வயதுடையவர் ஆவார்.

சனத் நிஷாந்தவுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் தொடர்பில் விசாரணை

முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளை வெளியிடுபவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்ளே இந்த பின்னணியில் இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கூரிய ஆயுதங்களால் தாக்கி மூவரிடம் கொள்ளை

பமுனுகம தெலத்துர அலபம்மா பகுதியில் மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களின் பணம் மற்றும் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வீதியில் மறைந்திருந்த நால்வர் தாக்குதலை நடத்தி 132,000 ரூபா பணம், 5 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஸ்வ புத்தருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

‘விஸ்வ புத்தர்’ என தன்னை அடையாளப்படுத்திய பெளத்த மதம் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்திய நபருக்கான விளக்கமறியல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள மற்றுமொரு வழக்கு தொடர்பாக அவர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து கடவத்த மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடிய கைதிகளில் 34 பேர் கைது

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று முன்தினம் (24) இரவு இடம்பெற்ற மோதலின் பின்னர் தப்பியோடிய 75 கைதிகளில் 34 பேர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற கைதிகளில் சிலர் சரணடைந்துள்ள நிலையில், எஞ்சிய 13 கைதிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

போதை பொருளுக்காக தன் சொந்த சிறுநீரகத்தை விற்ற நபர்

போதை பொருளுக்காக தன் சொந்த சிறுநீரகத்தையே விற்று போதைபொருள் வாங்கி அதற்கு அடிமையானவரையும் மற்றுமொரு சந்தேகநபரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடமிருந்து போதைபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 6ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்துக்கு ஜீவன் இரங்கல்

“இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் பேரதிர்ச்சியளிக்கின்றது. ஒரு துடிப்பான இளம் அரசியல்வாதியாக மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்த அவரின் மரணம் பேரிழப்பாகும்“ என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முட்டை விலையை ஒழுங்குபடுத்துவதற்கு ஆணைக்குழு அவசியம்

முட்டை விலையை ஒழுங்குபடுத்துவதற்கு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை பங்குதாரர்களால் விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த விலையில் முட்டைகளை சேகரிக்கும் கறுப்புச் சந்தை மொத்த வியாபாரிகள் என அழைக்கப்படும் ஒரு சிலரால் நியாயமற்ற முறையில் விலைகள் தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறியவர்களால் நாடு வங்குரோத்து அடைந்தது“

ஆட்சியாளர்களுக்குத் தேவையான நேரத்தில் சரியான அறிவுறுத்தல்களை வழங்காததன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்களை கண்டறியும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.