பெலியத்தையில் ஐவர் கொடுரமாக சுட்டுக் கொலை: கொலையாளிகளுக்கு உளவுத் தகவல், வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு

OruvanOruvan

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் மேலும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் குற்றவாளி உரகஹா மைக்கேலின் அறிவுறுத்தலின் பேரில் தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஹெரோயின் கடத்தல்காரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து 9 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொஸ்கொட சுஜிக்கு நெருக்கமான குற்றக் கும்பலைச் சேர்ந்த உரகஹா மைக்கேலின் ஆலோசனையின் பேரில் றோயல் பீச் சமன் உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

துபாயில் இருந்து உரகஹா மைக்கேல் தமக்கு போன் செய்து வேகன் ஆர் ரக கார் அல்லது மோட்டார் சைக்கிளுடன், கொலை நடந்த தினத்தன்று தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இருவரிடமும் கார் கிடைக்காததால், தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றதாக சந்தேக நபர்கள் கூறியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் அன்றைய தினம் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் நேரத்தை எதிர்பார்த்து கொலையாளிகளுக்கு தகவல் வழங்க நியமிக்கப்பட்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்தனர்.

ரோயல் பீச் சமன் தங்கல்ல நீதிமன்றில் இருந்து வெளியே வந்த பின்னரே கொலை செய்ய தயாராக இருந்ததாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோயல் பீச் சமனை கொல்வதற்கான ஒப்பந்தத்தை உரகஹா மைக்கேலுக்கு வழங்கியவர் கொஸ்கொட சுஜீ எனவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி பெலியத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 40 வயதான ஹசித வன்சுக, 47 வயதான சமன் பிரசன்ன பெரேரா, 34 வயதான சமீர மதுஷங்க, 36 வயதான புத்திக ராஜபக்ச மற்றும் 44 வயதான சம்பிய ஜயதிலக்க ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.