இலங்கையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேற்றம்: இனி எவர்மீதும் சேறு பூசும் செய்திகளை பகிர முடியாது
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டம் (online safety bill) இலங்கை பாராளுமன்றத்தில் இன்று மாலை (24) 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய எதிர்க்கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.
நிகழ்நிலை காப்புச் சட்டம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. உத்தேச திருத்தச்சட்டம் இரண்டாம் வாசிப்புக்காக நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமூலம் மீதான இன்றைய இறுதிநாள் விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதரவான மற்றும் எதிரான கருத்துகளை வெளியிட்டன.
இறுதியில் சட்டம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு சபாநாயகர் அங்கீகாரம் அளித்ததும் நடைமுறைக்கு வரும். சட்டம் நடைமுறைக்கு வந்ததும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் பகிரப்படும் போலி செய்திகள் மற்றும் சேறுபூசும் செய்திகள் தொடர்பில் சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழு கண்காணிப்புகளை நடத்தும்.
குற்றம் உறுதி செய்யப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக 5 வருடங்கள் குற்றவாளிக்கு தண்டனை அளிக்க முடியும்.
விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை வெளியிடுகிறோம். சட்டமொன்று கொண்டுவரப்பட முன் அனைத்து தரப்பினரினதும் கருத்துகளை பெற்றுக்கொண்டு உரிய நடைமுறைகளின் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டும்.
உத்தேச சட்டமூலத்தின் 54 சரத்துகளில் 34 சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. துறைசார் மேற்பார்வை குழு இதில் என்ன செய்துள்ளதென தெரியவில்லை. கலியுகம்
இது தேர்தல் வருடமாக இருப்பதால் மக்கள்னி கருத்துச் சுதந்திரம், அடிப்படை உரிமைகளை பறிக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளார். ஒரு நபரின் விபத்துக்கு சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை வரவேற்கிறோம்.
என்றாலும், இவை அனைத்தும் ஆழமான கருத்தாடல்களின் பின்னரே செயல்பாட்டுக்கு வர வேண்டும். கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஒரு நாட்டுக்கு இவ்வாறான சட்டங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச உரையாற்றுகையில்,
”நாட்டில் ஒழுக்கமுள்ள மற்றும் நீதியான சமூகமொன்றை உருவாக்குவதற்கு இந்தச் சட்டமூலம் அத்தியாவசியமானதொன்றாகும். நாட்டில் உள்ள அனைத்து தரப்புகளுக்கும் செயல்படும் விதிமுறையொன்று உள்ளது.
சமூக ஊடகங்களுக்கு மாத்திரம் முழுமையான சுதந்திரத்துடன் செயல்படும் அனுமதியை வழங்க முடியாது. சமூக ஊடகங்களில் நல்ல ஒழுக்கம் உடையவர்களும் உள்ளனர். தீய ஒழுக்கங்களை கொண்டவர்களும் உள்ளன. தீய ஒழுக்கம் கொண்டவர்களே அதிகமாக உள்ளனர்.
அதனால் நாட்டில் அனைத்து தரப்பினரும் அவர்களது ஒழுக்கம் மற்றும் சட்டத்திட்டங்களை பின்பற்றி வாழ்வதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.” என்றார்.
எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிடுகையில்,
சிங்கப்பூரில் உள்ள சட்டம் போன்று எமது சட்டம் இருக்கும் என துறைசார் அமைச்சர் கூறியிருந்தார். ஊடகச்சுதந்திரத்தில் சிங்கப்பூர் 145ஆவது இடத்தில் உள்ளது. ஆசியாவில் ஊடகச் சுதந்திரம் மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.” என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்த கருணாகரம் தெரிவிக்கையில்,
50 இற்கும் அதிகமான ஊடகவியலாளர் எமது நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தமிழர்களாகும். அரசாங்கத்தின் அட்டூழியங்களும், ஒடுக்குமுறைகளும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவே அதிகமாக இடம்பெற்றுள்ளன.
சமூக வலையத்தளங்கள் ஊடாக பல பாதிப்புகள் சமூகத்தில் ஏற்படுகின்றன. பல குடும்பங்கள் இதனால் பிரிகின்றன. ஆனால், மக்களின் எழுச்சியை தடுக்கும் நோக்கில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படக் கூடாது.”எனவும் கூறினார்.
விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஊடக கட்டுப்பாடுகள் என்பது நாட்டில் அவசியமாகும். நாட்டில் உள்ள பல ஊடகங்கள், எமது விபம்துக்கு சேறு பூசும் நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றன.
எனது மகள் வீட்டில் அண்மையில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றது. இதில் 30 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்கள், நகைகள் காணாமல்போயுள்ளதாக செய்திகளை வெளியிட்டிருந்தனர். அவ்வாறு அங்கு எந்தபொரும் காணாமால்போகவில்லை.
அத்துடன், நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற பரிசுப் பொருட்களும் இங்கு இருந்ததாக போலி செய்திகளை வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனக்கு கிடைக்கப்பெற்ற பரிசு பொருட்களை பொலனறுவையில் நான் அமைத்த அருங்காட்சியகத்தில் வைத்துள்ளேன்.
போலி செய்திகளை வெளியிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளே அதிகமாக வெளியிடப்படுகின்றன. இதனால் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் அவசியமாகும். ஆனால், தற்போதுள்ள சட்டத்தில் கட்டுப்பாடுகள் இறுக்கமாக உள்ளன.” என்றார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உரையாற்றுகையில்,
சமூக ஊடகங்களில் பெண்களுக்கு பாரிய அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பெரிதும் பாதிக்கிறது.
எமது நாட்டில் பல சினிமா பிரபல்யங்களுக்கு சேறு பூசும் வகையில் பல புகைப்படங்களும், காணொளிகளும் பகிரப்பட்டுகின்றன. இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் மன வேதனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்கிறார்களா?.
உலகில் அபிவிருத்தி அடைந்துள்ள அனைத்து நாடுகளும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தனி மனித சுதந்திரத்துக்கு பாதிப்பு இல்லாது விமர்சனங்களை முன்வைக்கும் உரிமை இருக்க வேண்டும். அதனை ஏற்றுக்கொள்கிறோம். இன்று பாராளுமன்றில் இருக்கும் நாம் நாளை சாதாரண பிரஜையாக இருக்கலாம்.
ஆனால், சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி பிரசாரங்கள் ஊடாக ஏற்படும் அழிவுகளுக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக நாம் இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்.” எனவும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியதாவது,
நிகழ்நிலை காப்புச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானதாகும். நாட்டில் கொண்டுவரப்பட்ட பல சட்டங்கள் தமிழ் மக்களை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கு ஒரு பிரச்சினைக்கான போராட்டம் குறித்து ஒரு அறிவித்தல் விடுத்து அதனை பகிர்வர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முடியும். மயிலத்தமடு, மாதவனை பிரச்சினையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு கூட இந்தச் சட்டம் பயன்படுத்தக்கூடும்.
காணாமல்போனோர்கள் எழுப்பும் குரல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுக்க முடியும். உருவாக்கப்படும் ஆணைக்குழுதான் நாட்டு மக்களின் கருத்தை உருவாக்க முடியும். தனிப்பட்ட நபர்களின் கணினி மற்றும் தொலைபேசிகளை எவ்வித நீதிமன்ற உத்தரவுகளுமின்றி ஆராயும் அதிகாரத்தை சட்டம் வழங்குகிறது.
மக்கள் ஆட்சிக்கு எதிரான ஒரு சட்டமாக இது உள்ளது. இதற்கு ஆதரவளிக்கும் நபர்கள் மக்கள் ஆணையை காட்டிக்கொடுப்பவர்களாகும். அரசாங்கத்துக்கு எதிராக எழுச்சியடையும் மக்கள் போராட்டங்களை நிகழ்நிலை காப்புச் சட்டம் மூலம் ஒடுக்க முடியும்.” என்றார்.